சென்னை மௌலிவாக்கத்தில் நடந்த 11 மாடி கட்டட விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த பொறியாளர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அவரது சடலத்தை செவ்வாய்கிழமை மீட்டனர்.
விருதுநகர் நகராட்சி 17-வது வார்டு பர்மா காலனியைச் சேர்ந்தவர் முகமதுயாசின். இவர் சிவகாசி சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது அசன்(28). இவர் சென்னை கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வை பொறியாளராக வேலை பார்த்து வந்தார். மௌலிவாக்கத்தில் இவர் பணியாற்றிய இரு அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று சனிக்கிழமை இரவு திடீரென இடிந்து தரைமட்டமானது.
இதில், இடிபாடுகளில் சிக்கிய முகமது யாசின் நிலை என்ன என்பது தெரியாமல் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலையுடன் சென்னைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் முகமது அசன் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். அதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.
இவர் சம்பவத்தன்று கீழ்தள அறையில் நின்று கொண்டு தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது சடலம் ராயப்பேட்டை ஜூம்மா பள்ளி வாசலில் செவ்வாய்கிழமை இரவு தொழுகைக்கு பின் தகனம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.