சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித் மாணவர் மீது தாக்கப்பட்டதாக புகார்: இரு தரப்பினரும் திரண்டதால் பதற்றம், போலீஸ் குவிப்பு
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் புதன்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து இரு தரப்பினரும் திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் புதன்கிழமை தாக்கப்பட்டதை அடுத்து இரு தரப்பினரும் திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 6 பேர் காயமுற்றனர். இருவர் இறந்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வடக்குமாங்குடியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோட்டார் கொட்டகை, வைக்கோல் போர் தீ வைத்த கொளுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வடக்குமாங்குடியைச் சேர்ந்த தலித் இளைஞர்களான விக்னேஷ் (23), சஞ்சய்காந்தி (25) ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்மநபர்கள் இருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்து தலித் மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினருடன் இணைந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை மாலை வடக்குமாங்குடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வல்லத்துறை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து மாணவர் சந்தோஷ் (15) பள்ளிக்கு புதன்கிழமை காலை நடந்து சென்ற போது அடையாளம் தெரிந்த 4 பேர் கத்தி மற்றும் இரும்புபைப்பால் தாக்கிப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள இரு குடிசைகளில் தீவைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் காரில் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது கார் மீது கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைப்பட்டன.
இத்தகவல் அறிந்த தலித் மக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதேவேளையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தாங்கள் யாரும் தாக்கவில்லை, வேண்டுமென்றே புகார் தெரிவிப்பதாக ஒன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பிகள் ஆர்.ராஜாராம் (சிதம்பரம்), சுரேஷ்பாபு (சேத்தியாத்தோப்பு), இன்ஸ்பெக்டர்கள் பி.முருகானந்தம் (அண்ணாமலைநகர்), உதயகுமார் (பரங்கிப்பேட்டை), அம்பேத்கர் (சேத்தியாத்தோப்பு) மற்றும் அதிரடிப்படை போலீஸார் அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வசிக்க வேறு இடம் வழங்க வேண்டும்: மனித உரிமை கட்சி
இச்சம்பவம் குறித்து மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தது: மக்களவைத் தேர்தல் முதல் வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பற்றி நிலையில் அம்மக்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அப்பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும். இடம் வழங்காவிடில் குடும்ப அட்டைகளை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எல்.ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
மாற்றுக்கட்சியினர் தூண்டுதல்: பாமக புகார்
இச்சம்பவம் குறித்து பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் தெரிவித்தது: இரு சமூகத்தினரும் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். மாற்றுக்கட்சியினர் கலவரத்தை தூண்டி வருகின்றனர். இருநாட்கள் நடைபெற்ற சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் யாரையும் தாக்கவில்லை. ஆனால் தாக்கியதாக புகார் அளித்து தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்ய பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் வாழும் பகுதியில் மாற்றுக்கட்சியினர் யாரையும் நுழையவிடுவதில்லை. ஆனால் தலித் சமூகத்தினர் வாழும் பகுதிக்கு மாற்றுக்கட்சியினரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, மனித உரிமை கட்சியினர் செல்ல போலீஸார் அனுமதித்துள்ளதால், அவர்கள் கலவரத்தை தூண்டுவிட்டு ஆதாயம் தேடி வருகின்றனர். காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர் என வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.