முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயிலில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற நிறைவு விழா: ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமை ஆதீனம் சார்பில் ஜூலை 6,7,8 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் உரை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமை ஆதீனம் சார்பில் ஜூலை 6,7,8 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் உரை விளக்க கருத்தரங்கம் நிறைவு விழா ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பங்கேற்று தருமை ஆதீனத்திடமிருந்து பன்னிரு திருமுறை உரை நூல்களை பெற்றுக் கொண்டார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் திருமுறைகளை யானைகள் மீது வைத்து ஊர்வலம், உரைவிளக்க கருத்தரங்கள் ஆகியவை ஜூலை 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிறைவு விழா ஆயிரங்கால் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சொ.முத்துகந்தசாமி தேசிகரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி தேவஸ்தானம் கட்டளை தம்பிரான் ஸ்ரீதிருஞானசம்பந்த தம்பிரான் வரவேற்று பேசினார். சைவ சித்தாந்த புலவர் சி.ஞானஸ்கந்த தீட்சித் தலைமை வகித்துப் பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். தருமை ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீசத்திய ஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரையாற்றினார்கள்.

விழாவில் திருப்பனந்தாள் காசி மடம் இணைஅதிபர் ஸ்ரீசுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் ஸ்ரீமெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருபரங்குன்றம் ஸ்ரீஸ்கந்தகுரு பாடசாலை முதல்வர் ராஜாபட்டர், மயிலாடுதுறை வேதபுரம் சிவாகம பாடசாலை சுவாமிநாத சிவாச்சாரியார், மலேசியா பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தொழிலதிபர் ஆர்.எம்.சுவேதகுமார் நன்றி கூறினார்.

3நாள் விழா ஏற்பாடுகளை திருச்சி ஸ்ரீமெளன மடம் கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் தலைமையில் விழாக்கமிட்டியினர் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.எம்.சுவேதகுமார், கு.சேதுசுப்பிரமணியன், எஸ்.ஆர்.ராமநாதன், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி, தில்லை திருமுறைக்கழகம் முருகையன், டாக்டர் சண்முகம், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.