சிதம்பரம் அருகே மனித உரிமை கட்சி தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: 40 பேர் மீது வழக்குப் பதிவு, 2 பேர் கைது
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலைநகர் போலீஸார் 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். 2
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலைநகர் போலீஸார் 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 6 பேர் காயமுற்றனர். இருவர் இறந்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வடக்குமாங்குடியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.
அப்பகுதியில் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோட்டார் கொட்டகை கொளுத்துவது, வைக்கோல் போரை எரிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்ரு வருகிறது. கடந்த சில தினங்கள் தலித் இளைஞர்கள் விக்னேஷ், சஞ்சய்காந்தி ஆகியோர் மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வல்லத்துறை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சந்தோஷ் (15) பள்ளிக்கு நடந்து சென்ற போது அடையாளம் தெரிந்த 4 பேர் கத்தி மற்றும் இரும்பு பைப்பால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள இரு குடிசைகளில் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வடக்குமாங்குடியில் இரு தரப்பினரும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு போலீஸார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனித உரிமை கட்சி தலைவர் எல்.ஆர்.விஸ்வநாதன் காரில் புதன்கிழமை காலை அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது கார் மீது, ஒரு தரப்பினர் கல்வீசி தாக்கிய கண்ணாடிகள் உடைப்பட்டன. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு பரஞ்ஜோதி (38), கணபதி (38) ஆகிய இருவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் கபிலன், அலெக்சாண்டர், சுதாகர் ஆகிய 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.