வடக்குமாங்குடியில் தலித் மக்கள் மீது தாக்குதல்: தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய உதவிஇயக்குநர் விசாரணை
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித்மக்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் குறித்து தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய சென்னை மண்டல உதவிஇயக்குநர் பி.ராமசாமி வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் தலித்மக்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் குறித்து தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய சென்னை மண்டல உதவிஇயக்குநர் பி.ராமசாமி வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கடந்த ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் 6 பேர் காயமுற்றனர். இருவர் இறந்தனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வடக்குமாங்குடியைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 50 பேரை கைது செய்தனர்.
அப்பகுதியில் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோட்டார் கொட்டகை கொளுத்துவது, வைக்கோல் போரை எரிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்கள் தலித் இளைஞர்கள் விக்னேஷ், சஞ்சய்காந்தி ஆகியோர் மர்மநபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வல்லத்துறை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சந்தோஷ் (15) பள்ளிக்கு நடந்து சென்ற போது அடையாளம் தெரிந்த 4 பேர் கத்தி மற்றும் இரும்பு பைப்பால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள இரு குடிசைகளில் தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வடக்குமாங்குடியில் இரு தரப்பினரும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு போலீஸார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய சென்னை மண்டல உதவிஇயக்குநர் பி.ராமசாமி, விசாரணை அதிகாரி லிஸ்தர் கொண்ட குழுவினர் வடக்குமாங்குடி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஏப்.24-ம் தேதிக்கு பிறகு நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து தலித் மக்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்கப்பட்ட பள்ளி மாணவர் சந்தோஷை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அவருடன் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் உடன் சென்றனர்.
தலித் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்: உதவி இயக்குநர் பி.ராமசாமி
விசாரணைக்கு பின்னர் உதவி இயக்குநர் பி.ராமசாமி செய்தியாளர்களிடையே தெரிவித்தது: வடக்குமாங்குடி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு தலித் மக்களிடம் விபரங்களை கேட்டறிந்தோம். அப்பகுதியில் எந்த சமயம் தாக்குவார்கள் என பயத்துடன் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். பயத்துடன் அம்மக்கள் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினரின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் வேறு இடம் வழங்குவது குறித்து கேட்டனர். ஒரு இடத்தில் 50 வருடங்களாக வசித்து வருபவர்களை உடனடியாக மாற்றம் செய்ய முடியாது. உடனடியாக அனைவருக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: தொடர் தாக்குதல் சம்பவத்தை தடுக்க இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை மிகவும் கடுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் தொடர் சம்பவம் தடுக்கப்படும். தற்போது தலா ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மாற்றுக்கட்சியினர் தூண்டு விடுவதாக கூறப்படும் புகார் மீது ஆதாரம் இல்லை. உண்மையிலேயே யார் தூண்டிவிடுகிறார் என தெரிந்தால், தடை விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தலித் மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் யார் என கண்டறியப்பட்டு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி படிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தலித் பகுதியில் வசிக்கும் அனைத்து மாணவர்களும் விடுதியில் தங்கி படிக்க விரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பி.ராமசாமி தெரிவித்தார்.