முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

சிதம்பரம் நாகக்சேரி வடகரையில் அழிந்த நிலையில் முதலாம் பராந்தகன் காலத்து மூத்ததேவி திருக்கோயில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இந்திராணி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மூத்ததேவி சிற்பம் மற்றும் கல்வெட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

சிதம்பரம் நாகக்சேரி வடகரையில் அழிந்த நிலையில் முதலாம் பராந்தகன் காலத்து மூத்ததேவி திருக்கோயில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இந்திராணி என்பவர் கொடுத்த தகவலை அடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூத்ததேவி சிற்பம் மற்றும் அதனருகில் கல்வெட்டினையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்தது:

சிதம்பரம் நாகச்சேரி குளத்தின் வடகரை தெருவில் உள்ள சப்தமாதர் கோயிலில் மூத்ததேவியின் கிபி 9-ம் நூற்றாண்டு சிற்பம் வழிபாடிழந்த நிலையில் காணப்படுவது கண்டறிந்தோம். கைலாயத்திலிருந்து வந்த பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷனின் அவதாரம்) தில்லைவனத்தில் உருவாக்கிய தீர்த்தமே நாகசேரி தீர்த்தம் என்றும், அவர் வழிபட்ட இறைவனே அனந்தீஸ்வரர் என்றும் தில்லை வரலாறு கூறுகிறது. மூத்ததேவியின் தோற்றம் பற்றிக்கூறும் புராணங்கள், அசுரர்கள் பாற்கடலை கடைந்தபோது வந்த தேவி என்று கூறுகின்றன. இவருக்கு பின்னரே மகாலட்சுமி வந்தார். மகாலட்சுமிக்கு மூத்தவர் மூத்ததேவி, மூத்தாள் என்று இத்தேவி அழைக்கப்பட்டார். மூத்ததேவியை சேட்டைதேவி, ஜேஷ்டாதேவி என்ற வேறு பெயரிலும் அழைப்பர்.

சிற்பஅமைப்பு:

நாககேரி வடகரையில் கிழக்கு நோக்கிய நிலையில் 3.5 அடி உயரத்துடன் 2.75 அடி பருமனுடன் காணப்படும் மூத்ததேவியின் சிற்பரம் பெருத்த உடலும், பருத்த வயிறுமாக காட்சியளிக்கிறது. மூத்தவேயின் வலப்பக்கம் நந்தி வடிவத்தில் காணப்படும் உருவம், தேவியின் மைந்தன் மாந்தன் என்பவனின் சிற்பமாகும். இடப்பக்கம் காணப்படும் அழகிய பெண் உருவம் தேவியின் புதல்வியான மாந்தியை குறிக்கிறது. மூத்ததேவியின் ஆயுதமான துடைப்பம் இடப்புறமும், ஊர் தோட்டியான காக்கை இவளது கொடியாக வலப்புறமாக வடிக்கப்பட்டுள்ளது. தேவி தனது நீள் காதுச்செவிகளில் மகர குண்டலங்களை அணிந்து, வலக்கை கடக முத்திரையிலும், இடக்கை மாந்தியின் தொடை மீது கை வைத்தவாரும் அமர்ந்த நிலையில் அழகுற அமர்ந்துள்ளார். வெந்த சாம்பல், வேகா கரிப்புழுதி, ஆட்டுத்தூசு, ஆடை துவைத்த நீர், விளக்குமாற்றின் புழுதி, உண்ட எச்சில், விளக்கின் நிழல் போன்றவை மூத்ததேவியின் வாழிடங்களாகும், கழுதை இவரது வாகனமாகும்.

முதலாம் பராந்தகன் கால சிற்பமா?:

முற்காலச் சோழர்கள் தாங்கள் எடுப்பித்த சிவாலயங்களில் அஷ்ட பரிவாக தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என்ற அனைவருக்கும் திருஉருவம் செய்து தேவக்கோட்டத்தில் (கருவறை சுவற்றில்) அமைத்தனர். முதலாம் பராந்தகன் தான் எடுப்பித்த பெரும்பாலான கோயில்களில் மூத்ததேவிக்கு இடமளித்து சிறப்பித்துள்ளான். சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனான முதலாம் பராந்தகன் சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். சிதம்பரத்தை பொறுத்தமட்டும் அனந்தீஸ்வரர் கோயிலும் முதலாம் பராந்தக திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளான் என்பதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றனர். இக்கோயிலில் இடம் பெற்றிருந்த மூத்ததேவியின் சிற்பமே நாகசேரி குளத்தின் வடகரையில் தற்போது வழிபாடிழந்து காணப்படுகிறது.

முத்ததேவி வழிபாடு மறையக் காரணம்:

பல்லவர், பாண்டியர், முற்கால சோழர்கள் என வேந்தர்கள் பலரும் போற்றிய மூத்ததேவியின் வழிபாடு காலப் போக்கில் கவனிப்பாரின்றி போனது. மூத்ததேவியை மக்களும், மன்னரும் செல்வ வளம் தகும் தேவியாகவே வழிபட்டு வந்திருக்கின்றனர். மூத்ததேவியே, எங்களுக்கு தீமை, சோம்பல், வறுமை, நோய் இவைகளை வழங்காதே என்ற வேண்டிக் கொள்வதற்கே இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வந்துள்ளது. கிபி 11-ம் நூற்றாண்டு வரை மக்களால் இத்தெய்வம் வழிபடப்பட்டு சிவாலயங்களில் பரிவார தேவதையாக எங்கு அமைக்க வேண்டும், ஊரில் தனியாக மூத்ததேவி கோயில் எங்கு அமைக்க வேண்டும் எனத்தனியாக சிற்ப சாஸ்திர நூல்கள் விரிவாக கூறுகின்ற அளவுக்கு இத்தெய்வ வழிபாடானது தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்துள்ளது. அதன் பின்னர் இத்தெய்வ வழிபாடு துரதிருஷ்டத்திற்கும், தீட்டுக்கும், திருஷ்டிக்கும், சோம்பலுக்கும், அழகின்மைக்கும் குறியீடாக காலப்போக்கில் கற்பிக்கப்பட்டது. வைணவ சமயத்தில் திருமகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றதால், இவ்வழிபாடு  வெறுக்கப்பட்டு புறம் தள்ளப்பட்டது. மூத்ததேவியை மூதேவி என இழிவுபடுத்தும் அளவுக்கு இத்தெய்வ வழிபாடு வெறுத்து ஒதுக்கப்பட்டது.

பிற்காலச்சோழர் கல்வெட்டு:

மூத்ததேவி சிற்பத்தின் அருகிலேயே இடிந்த கோயிலின் கண்டப்பகுதி (அடிப்பகுதி) பாறைத்துண்டு ஒன்றில் 'திரு மூலவதேவ தேவருக்கு' எனத் தொடங்கும் பிற்காலச்சோழர் காலத்து கல்வெட்டு ஒன்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூலபருடையார் என்ற கோயில் நிர்வாக அமைப்பு, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோிலுக்கு அளித்த 3 மா அளவிலான நிலதானம் பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.