நெல்லையில் போலீஸார்-மாணவர்கள் மோதல்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே எழுந்த மோதலில் மாணவர் சங்க நிர்வாகி சட்டை கிழிந்தது. 3 மணி நேரம் நீடித்த மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணினி அறிவியல் உள்ளிட்ட சுயநிதிப் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி புளியங்குடி, ஆழ்வார்குறிச்சி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஆவரைகுளம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மாணவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் உச்சிமகாளி, திருநெல்வேலி மாவட்டச் செயலர் அசோக்ராஜ், தலைவர் முருகேசன் ஆகியோரை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். மோதலில் மாணவர் சங்கச் செயலர் அசோக்ராஜ் சட்டை கிழிந்தது.
இதனிடையே பேட்டைக் கல்லூரியில் அரசு சுயநிதிப் பிரிவுகளில் பயிலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்கு அரசு அறிவித்த கட்டணச் சலுகை வழங்கவில்லை என புகார் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மற்றொரு நுழைவு வாயில் வழியாக மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை அடுத்து போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மாணவர்கள் போராட்டம் நீடித்தை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். காவல் வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. 3 மணி நேரம் நீடித்த மாணவர்களின் போராட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது
.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். மாணவர்களிடம் தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து சுயநிதி பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் உச்சிமகாளி பேசியதாவது:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. ஆட்சியரிடம் கோரிக்கை விடிக்கப்பட்டது. மடிக்கணினி வழங்குவதாக உறுதி அளிக்கவில்லை.அடுத்த கட்டமாக அரசுக்கு எதிராக இம்மாவட்டத்தில் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து மடிக்கணினி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.