முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலித்துகள் படுகொலை, சொதத்துகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

தமிழகத்தில் தலித்துகள் படுகொலை, சொதத்துகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்மாவட்டச் சிறப்பு செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூலி உயர்வு உள்ளிட்ட தங்களின் உரிமைக்காக போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்களின் நலனுக்காக போராடிய அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தாமிரவருணி நதிக்கரையில் அரசு நினைவுத்தூண் அமைக்க வேண்டும்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளத்தில் 3 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட பிற சமுதாயத்தினரால் தலித் மக்கள் உடப்பன்குளத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சிதம்பரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்களுக்கு தீ வைப்பு, வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. தர்மபுரி சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் தலித்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. காவல்துறையினரும் தலித்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். புகார் அளிக்க சென்ற தலித் மக்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது. இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி தலித் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க வேண்டும்.

கல்வி கூடங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசு ஆரம்ப பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயம் ஆக்க வேண்டும். கல்வியை வணிகம் ஆக்காமல் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சேலத்தில் கல்வி உரிமை மாநாடு நடத்தப்படுகிறது.தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு மசோதாவை பாரதிய ஜனதா அரசு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலே நிலைக்குழுவுக்கு அனுப்பி உள்ளது. இது தலித் மக்களுக்கு எதிரான நிலையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.மசோதா குறித்து மக்களவை, மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும்.

பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நட்பு நாடு, ஆகவே கண்டிக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் தெரிவித்திருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது. இஸ்ரேல் நடவடிக்கையை இந்தியா கண்டிக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. சபை கவனத்தில் கொண்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் கட்சி தலையீடு இருந்ததாக மார்கண்டேய கட்ஜூ காலம் கடந்து குற்றசாட்டு தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்த மார்கண்டேய கட்ஜூ இந்த குற்றசாட்டை அப்போதே தெரிவிக்காதது ஏன்?குற்றசாட்டு நீதித்துறையை கலங்கப்படுத்துவதாக உள்ளது. இந்த குற்றசாட்டின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக ஐயம் எழுகிறது.  நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருந்ததில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான 99 வருட ஒப்பந்தம் முடியும் நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள தனியார் நிர்வாகத்திற்கு காலநீடிப்பு செய்து வழங்காமல்,தொழிலாளர்கள் நலன் கருதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார் அவர்.

பேட்டியின்போது, கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் எம்.சி. கார்த்திக், மாநகர் மாவட்டச் செயலர் அமுதாமதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →