நெல்லை மாவட்டத்தில் 3,100 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி: வேளாண் அதிகாரி தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் கார் சாகுபடியில் இதுவரை 2,670 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. 3,100 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் கார் சாகுபடியில் இதுவரை 2,670 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. 3,100 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி வேளாண்துறை இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் தெரிவித்தார்.
தாமிரவருணி பாசனத்தில் நிகழ் கார் பருவம் சாகுபடி செய்ய ஜூலை 3 ஆம் தேதி கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூலை 4 ஆம் தேதி பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை கருத்தில் பாபநாசம் அணையில் இருந்து 1100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இப்பாசனத்தில் அதிக மகசூல் தரும் அம்பை 16, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
திருந்திய நெல் சாகுபடி: திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு குறித்து வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 3,750 மான்யம் வழங்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 3,100 ஹெக்டேரில் நெல் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் இதுவரை 2,670 ஹெக்டேரில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,200 ஹெக்டேரில் நெல் நடவு செய்ய தேவையான நாற்று பாவப்பட்டுள்ளது என்றார் அவர்.