முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர் அருகே பூமிக்கடியில் விலை உயர்ந்த கற்களை சட்டவிரோதமாக தோண்டி எடுத்த கும்பல்: போலீஸாரைக் கண்டதும் ஓட்டம்

கரூர் மாவட்டத்தில் கடவூர், சேங்கல், வெள்ளியணை உள்ளிட்ட இடங்களில் பூமிக்கடியில் தங்க நகைகள் மற்றும் மோதிரங்களில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த பச்சை, சிவப்பு, வெள்ளை கற்கள் கிடைத்து

Updated On : 4 ஜூன், 2014 at 3:50 PM
பகிர்:

கரூர் அருகே பூமிக்கடியில் விலை உயர்ந்த கற்களை சட்ட விரோதமாக புதன்கிழமை தோண்டி எடுத்த கும்பல் போலீஸாரைக் கண்டதும் ஓட்டம்பிடித்தனர்.

கரூர் மாவட்டத்தில் கடவூர், சேங்கல், வெள்ளியணை உள்ளிட்ட இடங்களில் பூமிக்கடியில் தங்க நகைகள் மற்றும் மோதிரங்களில் பதிக்க பயன்படும் விலை உயர்ந்த பச்சை, சிவப்பு, வெள்ளை கற்கள் கிடைத்து வருகின்றன. இவற்றை ஒவ்வொரு ராசிக்கு ஏற்றவாறு, அந்தந்த நிறங்களில் உள்ள கற்களை நகைகளில் பதிப்பார்கள். இவற்றை அரசுக்கு தெரியாமல், பலர் சட்டவிரோதமாக தோண்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். சட்டவிரோத கற்களை தோண்டி எடுக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் அவ்வப்போது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கல்லுமடை என்ற கிராமத்தில் சமீப காலமாக பூமிக்கடியில் இருந்து விலை உயர்ந்த கற்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக இந்தப் பகுதியில் பல இடங்களில் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. குறிப்பாக மழை காலங்களில் இந்த கற்கள் அதிகளவில் கிடைக்கும். கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததை அடுத்து,  பலர் கல்லுமடை பகுதியில் விலை உயர்ந்த கற்களை தோண்டி எடுத்தனர். இதுகுறித்து, அப்பகுதியினர் வெள்ளியணை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் வருவதைக்கண்டதும் பலர் தப்பியோடிவிட்டனர். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

இதுகுறித்து அப்பகுதியில் சிகப்பு கற்களை எடுத்து வரும் அப்புகுதியைச் சேர்ந்த பி.பெரியசாமி(48) என்பவர் கூறுகையில், மழை காலத்தில், இங்கு அதிகளவில் சிகப்புக்கற்கள் கிடைக்கும். இந்த கல்லை தோண்டி எடுத்துச் செல்ல வெளியூர்க்காரர்கள் வருகிறார்கள். அவர்கள் எங்களுக்குத்தெரியாமலே குழிதோண்டி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். இக்கல் விலை உயர்ந்த ஆபரணங்களில் பதிக்க நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்துவார்கள். நாங்கள் குழிதோண்டாமல், காடுகளில் தேடுவோம். எப்போதாவது சிறிய கல் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட கல் கிடைப்பதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும். இதனை வாங்கிச் செல்வதற்கு என்றே நகைக்கடை வியாபாரிகள் இங்கு வருவார்கள். நல்ல தரமான கற்கள் என்றால் ஆயிரக்கணக்கில் விலை போகும். சாதாரண கற்கள் என்றால் 500 ரூபாய், 600 ரூபாய் என கொடுத்து வாங்கிச்செல்வார்கள். அவர்கள் பட்டை தீட்டி நல்ல விலைக்கு விற்று விடுவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.