மயிலாடுதுறை அருகே உணவகத்தில் தகராறு இளைஞர் கத்தியால் குத்திக் கொலை
நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே ஒரு உணவகத்தில் சுவையில்லாத உணவு வழங்கப்பட்டதைக் கண்டித்தத் தகராறில், ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அருகே ஒரு உணவகத்தில் சுவையில்லாத உணவு வழங்கப்பட்டதைக் கண்டித்தத் தகராறில், ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
சீர்காழி வட்டம், அளக்குடி பண்டாரவாடைத் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் கார்த்திகேயன்(30). கட்டடத் தொழிலாளரான இவர், மயிலாடுதுறை, கோழிகுத்தி (கோடிஹத்தி விமோசனபுரம்) கிராமத்தில் உள்ள தனது உறவினர் பாண்டியன் என்பவரின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
கார்த்திகேயனும், உறவினர் பாண்டியனும் செவ்வாய்க்கிழமை இரவு மயிலாடுதுறை சித்தர்காட்டில் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, உணவு சுவையாக இல்லை எனக் கூறி கார்த்திகேயன், உணவகப் பணியாளர்களிடம் தகராறு செய்தாராம். உணவகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயனை கண்டித்து, சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், கார்த்திகேயனுக்கும், அந்தக் கும்பலுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்ள், கார்த்திகேயனை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
பலத்தக் காயமடைந்த கார்த்திகேயன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு தேவிகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.