காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகள் அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டுள்ளனர்: கி.வெங்கட்ராமன்
காவிரி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகள் அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டுள்ளனர் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகள் அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டுள்ளனர் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
சிதம்பரம் வடக்குரதவீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் பேசினார்.
அவர் பேசியது: உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில், தமிழகத்தில் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியாக காவிரி மேலாண்மை அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி குழுவினர் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவாக சொல்லவில்லை, பரிந்துரையாகதான் சொல்லியுள்ளது என்ற பொய்யை தெரிவித்துள்ளனர். அதற்கு பிரதமரும் மறுப்பு தெரிவிக்காமல் மெளனமாக இருந்துள்ளார். மத்தியஅரசு தமிழ்நாட்டை துச்சமாக கருதுகிறார்கள், தமிழர்களை வேண்டாதவர்களாக கருத்துகிறார்கள் என்பதுதான் அதற்கு பொருள்.
கர்நாடகத்தில் காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொரு முறையும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, விபரங்களை தெரிவித்து ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறார் ஜெயலலிதா. நீதிமன்ற உத்தரவை பெற்ற ஜெயலலிதா பிரதமரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்தாரே தவிர, செயல்படுத்துமாறு வலியுறுத்தவில்லை. மத்தியஅரசிற்கு அரசியல் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்திராகாந்தியுடன் இருந்த அரசியல் உறவிற்காக 1972-ல் காவிரி நீர் வழக்கை திரும்ப பெற்று தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டுள்ளனர் என கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் உழவர் முன்னணி கடலூர் மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன், மா.கோ.தேவராசன், சரவணன், தங்க.கென்னடி, மூங்கிலடி ராஜேந்திரன், சிவாயம் நாராயணசாமி, மதிவாணன், கண்ணங்குடி ரங்கநாதன்பிள்ளை, பண்ணப்பட்டு மு.சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.