முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகர மையப்பகுதியில் மதுபானக்கடை! மக்கள் கடும் அவதி

சிதம்பரம் நகர மையப்பகுதியில் குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுபானக்கடையினால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சிதம்பரம் நகர மையப்பகுதியில் குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மதுபானக்கடையினால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுபானக்கடையை மாற்றம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளனர்.

சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் வேணுகோபால்பிள்ளைத்தெரு (படித்துறை இறக்கம்), மாலைக்கட்டித்தெரு ஆகிய இரு இடங்களில் அருகருகே டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. வேணுகோபால் பிள்ளைத்தெரு சாலை வழியாகதான் பஸ்நிலையத்திலிருக்கு நடராஜர் கோயிலுக்கும், நகரத்திற்கு செல்கின்றனர். அதேபோன்று அண்ணாமலைநகர் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் போல்நாராயணன்தெரு வழியாக கோயிலுக்கு, நகரப்பகுதிக்கும் செல்லும் பிரதான வழியாக உள்ளது. இந்த பிரதான தெருக்களில் குடிகாரர்களின் அட்டகாசத்தால் மக்கள் அவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது.

மாலைக்கட்டித் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை அருகே 24 மனி நேரமும்  கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மாலைக்கட்டித் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி சுமார் 50அடி தூரத்தில் உள்ளது. இந்த தெருக்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் வாங்க பணம் கேட்டு பொதுமக்களையும், வியாபாரிகளையும் குடிகாரர்கள் மிரட்டுவதால் அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித பயணும் இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். மாலைக்கட்டித்தெரு வழியாக பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள்.

இது குறித்து காவல்துறையை நம்பி பலன் இல்லை என்ற முடிவோடு, அப்பகுதி மக்கள் விரிவாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். சைவத்திற்கு பெயர் போன சிதம்பரம் நகரம், அசைவ அயோக்கிய நகரமாக மாறிவருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.