பழனி இடும்பன் மலைப்பகுதியில் கேரள பொறியியல் பட்டதாரி வாலிபர் சடலம் எலும்புக்கூடாக மீட்பு
பழனி இடும்பன் மலைப்பகுதியில் கேரள பொறியியல் பட்டதாரி வாலிபரின் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின்னரே தற்கொலையா, கொலையா என தெரியவரும் என்பதால்
பழனி இடும்பன் மலைப்பகுதியில் கேரள பொறியியல் பட்டதாரி வாலிபரின் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின்னரே தற்கொலையா, கொலையா என தெரியவரும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி அருகே மெட்டூரை சேர்ந்தவர் தங்கப்பன். இவர் கொச்சியில் உள்ள ஒரு கோயிலில் செயல்அலுவலராக பணியாற்ரி வருகிறார். இவரது மகன் ஷியாம்(வயது 25). ஆட்டோமொபைல் பொறியாளரான இவர் கொச்சியில் தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி வாக்கில் பழனி கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச்சென்ற ஷியாம் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் அவரை தேடி கிடைக்காததால் அவரது பெற்றோர் கொச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புகாரின் பேரில் கேரள போலீஸ் உதவி கமிஷனர் சுனில் குமார், சப்இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் குழு அமைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். ஷியாமின் செல்போன் எண் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்த நிலையில் செல்போன் ஈஎம்ஐ ரகசிய குறியீட்டு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த எண்ணில் கேரள போலீஸார் தொடர்பு கொண்ட போது அந்த நபர் கோவை மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்றும் வைகாசி விசாகத்தின் போது பழனிக்கு சென்றபோது இடும்பன் கோயில் மலைப்பகுதியில் கிடந்த ஒரு வாலிபரின் பிணம் அருகே இருந்து தனக்கு செல்போன் கிடைத்தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பழனி வந்த கேரள போலீஸார் பழனி நகர போலீசாரின் உதவியுடன் இடும்பன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். தரைப்பகுயில் இருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ள மலையின் பின்புறம் சுமார் 100மீட்டர் ஆழத்தில் பாறை இடுக்கில் எலும்புக்கூடாக ஷியாமின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை பழனி அரசு மருத்துவமனை டாக்டர் நௌஷாத் கனி மற்றும் கேரள போலீஸார் இடும்பன் மலைப்பகுதிக்கு சென்றனர். அங்கு எலும்புக்கூடாக கிடந்த சடலத்தை பார்த்த ஷியாமின் பெற்றோர்கள் இறந்தது மகன்தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து எலும்புக்கூடுகளை சேகரித்த பழனி அரசு மருத்துவமனை பணியாளர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
ரசாயன பரிசோதனைக்குப் பின்னரே ஷியாமின் இறப்பு கொலையை, தற்கொலையா என்பது தெரியவரும்.