வளர் இளம் பருவத்தில் ரத்தசோகை நோயை தடுக்க இன்று முதல் இரும்பு சத்து மாத்திரை விநியோகம்
குமரி மாவட்டத்தில் வளர் இளம் பருவத்தில் ரத்த சோகை நோயை தடுக்க வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் வளர் இளம் பருவத்தில் ரத்த சோகை நோயை தடுக்க வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரத்தசோகை மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. ரத்தத்தில் சராசரி ஹீமோகுளோபின் அளவு 12 மி.கி. முதல் 15 மி.கி. வரை இருக்க வேண்டும். இதில் 7-க்கு குறைவாக இருந்தால் அதிக ரத்தசோகை எனவும் 7.1 முதல் 9.9 இருந்தால் சுமாரான ரத்தசோகை எனவும், 10 முதல் 12 வரை இருந்தால் குறைந்த ரத்தசோகை எனவும் அறியப்படுகிறது.
Advertisement
ரத்தசோகை வளர் இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் 56 சதவிகிதம் வளரிளம் பெண்களிடமும், 30 சதவிகிதம் ஆண்களிடமும் ரத்தசோகை காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைவு, குடற்புழு பாதிப்பு நோய்களால் பாதிப்பு, உணவு பழக்கவழக்கங்கள் முதலியவை ரத்தசோகை நோய் வருவதற்கு முக்கிய காரணம். ரத்தசோகையினால் சோர்வு, படிப்பில் மந்தநிலை, தலைமுடி உதிருதல், வளர்ச்சி குறைபாடுகள், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஆகியவை ஏற்படுகின்றன.
பெண்களுக்கு குறைமாத பிரசவம், கர்ப்பகாலத்தில் உதிரப்போக்கு மற்றும் தாய் சேய் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்படுகிறது.
வளர் இளம் பெண்களிடையே ரத்தசோகையை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் வளர் இளம் பெண்களுக்கும் இரும்புச்சத்து மாத்திரை வியாழக்கிழமை தோறும் வழங்கப்படும்.
மதிய உணவிற்கு பின் ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் பள்ளி மாணவ மாணவிகள் மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.ஓவ்வொரு பள்ளியிலும் இத்திட்டத்தை செயல்படுத்த இரண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே ரத்தசோகை கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும்.பள்ளி செல்லா 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஊட்டச்சத்து மையங்கள் வழியாக இம்மாத்திரைகள் வழங்கப்படும்
ஊட்டச்சத்து உணவு பழக்கங்கள் குறித்து நலக்கல்வி வழங்கப்படும்.இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுóக்கு இருமுறை குடற்புழு நீக்கம் செய்வதற்கு அல்பண்டசோல் மாத்திரை வழங்கப்படும்.
இப்பணிகளை சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்துறை ஆகியவை இணைந்து செயல்படுத்தும்.
செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடி செயல்பாடுகளை ஆய்வு செய்யும்.
இன்று நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 1 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாராந்திர இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.