முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் 25-ல் கவுன்சிலிங்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மேலும் வருகிற

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் (சுயநிதி) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மேலும் வருகிற ஜூன் 25-ம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக்கட்டத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர 7651 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மாணவர்கள் 3011 பேர்களும், மாணவியர்கள் 4640 பேர்களும் அடங்குவர். விண்ணப்பித்தவர்கள் 11 பேர் மாற்றுத்திறனாளிகள். எம்பிபிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் நம்பர் கடந்த ஜூன் 18-ம் தேதி புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் (ஜூன் 20) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 25-ந் தேதி கவுன்சிலிங்: மேலும் வருகிற ஜூன் 25-ம் தேதி புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவையல்லாமல் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு கவுன்சிலிங் குறித்து ஸ்பீட் போஸ்ட் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியல் குறித்தும், கவுன்சிலிங் அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய பல்கலைக்கழக இணையதளம் முகவரி www.annamalaiuniversity.ac.in

3 மாணவியர்கள் முதலிடம்: எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் தரவரிசைப்பட்டியலில் 3 மாணவியர்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர். மதுரையைச் சேர்ந்த வி.பிரியதர்ஷினி 200க்கு, 200 மதிப்பெண்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த நிரஞ்சனா 200-க்கு 200 மதிப்பெண்கள், திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீதர்சிவக்குமார் 199.75 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.