கீழணை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதியில் தலைமைப் பொறியாளர் ஆய்வு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய நீர்தேக்க பகுதிகளை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொரியாளர் (நீர்ஆதாரம்) எஸ்.அசோகன்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய நீர்தேக்க பகுதிகளை சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொரியாளர் (நீர்ஆதாரம்) எஸ்.அசோகன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோயில் அருகே கடலூர்-தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள அணைக்கரையில் கீழணை 1836-ம் ஆண்டு கட்டப்பட்டது. தஞ்சை, நாகை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பாலமாக கீழணை பாலம் திகழ்கிறது. அப்பாலத்தின் வழியே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த அணையின் பாலம் பலவீனமடைந்ததால், 2009-ம் ஆண்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் 2012 ம் ஆண்டு பாலம் சீரமைக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது மீண்டும் பாலம் சேதமடைந்ததால், 2013 ம் ஆண்டு முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாகதான் சென்னை-கும்பகோணம் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
கீழணை மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1.25 லட்சம் ஏக்கர் நிலங்களும், நாகை மாவட்டத்தில் 22,400 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று வருகின்றன. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம்ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பெய்த பலத்த மழையினால் உபரி நீர் விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. கீழணையில் உள்ள 70 ஷட்டர்களில் 18 ஷட்டர்கள் பழுதடைந்து மூடமுடியாமல் 20 டிஎம்சிக்கு மேல் நீர் கடலுக்கு சென்று வீணானது. இதனால் கீழணையில் நீரை சேமிக்க முடியாமல் போனது.
எனவே இந்த ஆண்டு ஷட்டர்களை சீரமைக்கும் நோக்கில் சென்னை மண்டல தலைமைப் பொரியாளர் (நீர்ஆதாரம்) எஸ்.அசோகன் கீழணையை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த ஆண்டு நீரை சேமிப்பதற்காக செயல்படாமல் இருக்கும் 18 ஷட்டர்களை ஜூலை 20-ம் தேதிக்குள் சீர் செய்யப்படும். இந்த ஆண்டு தட்டுபாடின்றி விவசாயத்திற்கும், சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்படும் என எஸ்.அசோகன் தெரிவித்தார். பின்னர் அப்பகுதி மக்கள் பாலத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் வலியுறுத்தினர். அதற்கு அவர் பதில் தெரிவிக்கையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி முடிவு செய்த பின்னர் பேருந்து போக்குவரத்து மட்டும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் தலைமை பொறியாளர் எஸ்.அசோகன் கடலூர் மாவட்டத்தில் ரூ.26 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர்கள் அய்யம்பெருமாள், ரமேஷ், முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.