முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி நகராட்சி நகர்மன்ற கூட்டம் கவுன்சிலர்கள் ரகளையால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

திருக்கோயில் நகரான பழனியில் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் கண்டுகொள்ளப்படாத நிலையில் நகராட்சி நகர்மன்ற கூட்டம் கடந்த மூன்று மாதங்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

பழனி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் ரகளையால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திருக்கோயில் நகரான பழனியில் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் கண்டுகொள்ளப்படாத நிலையில் நகராட்சி நகர்மன்ற கூட்டம் கடந்த மூன்று மாதங்களுக்குப்பின் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நகராட்சி பழனிஆண்டவர் ஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகர்மன்ற தலைவர் வேலுமணி தலைமை வகித்தார்.  துணைத் தலைவர் முருகானந்தம், ஆணையர்(பொ) செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். நகர்மன்ற கூட்டத்தில் சுமார் ரூ.30 இலட்சம் மதிப்பில் அம்மாஉணவகம் கட்டுதல், ரூ.6 கோடியில் தார்சாலை, ரூ.3 கோடியில் நகராட்சி அலுவலகம் கட்டுதல், ரூ.7 கோடியில் கோடை நீர்த்தேக்கம் தூர்வாறி சீரமைத்தல், ரூ.3 கோடியில் தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட ரூ.30 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது.  கூட்டம் துவங்கிய சிலநிமிடத்தில் அதிமுக கவுன்சிலர் குமரேசன் தனது வார்டில் குப்பை அள்ளுவதில்லை என தெரிவித்தார். 

மேலும், உடன் கொண்டுவந்திருந்த குப்பைகள் நிரம்பிய கூடையை நகர்மன்ற தலைவர் முன்பு தரையில் கொட்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் பழனிச்சாமி, அகிலாண்டம், சின்னத்தாய் உள்ளிட்ட பலரும் தலைவர் முன் வந்து சுகாதாரக்கேடு குறித்து சத்தம் போட்டனர்.  இதைத் தொடர்ந்து தலைவர் வெளியேறவே கூட்டம் பாதியில் நின்றது.  இதைத் தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள் தலைவரை சமாதானம் செய்து அழைத்து வந்தபின் கூட்டம் தொடர்ந்தது. அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் தலைவரிடம், நகராட்சிக்கு ஏன் ஆணையர் நியமிக்கப்படவில்லை.  நகராட்சி அலுவலர்கள் யாரும் சரிவர பணிக்கு வருவதில்லை இதை ஏன் கண்காணிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். 

மேலும், நகராட்சி அதிகாரிகள் அனைவரும் பழனிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் தண்ணீர் தொட்டி நிலையத்திலேயே உள்ளனர்.  அங்கு என்ன வேலை? முதலில் அங்கு வாட்ச்மேன் போடுங்கள் என பேசினர்.   இதற்கு பல்வேறு கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து, நகராட்சி அலுவலர்கள் யாரும் பணிகளை சரிவர செய்வதில்லை என்று கோஷங்கள் எழுப்பினர்.  இதற்கிடையில் நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் தம்மிடம் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் எம்ஜிஆர் சிலை வைப்பது மற்றும் வார்டுகளில் போர்வெல் போடுவது குறித்து உத்திரவிட்டு மனு கொடுப்பதாக தலைவர் வேலுமணி புகார் தெரிவித்தார். 

இதனால் அதிமுகவினர் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.  கூட்டம் முடியும் தருவாயில் திமுக கவுன்சிலர் முஜிபுதீன் தலைவரிடம் சென்று குடிநீருக்காக தான் கொடுத்த மனு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதன் காரணம் என்ன என்று கேட்க காரணம் கூறாமல் தலைவர் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து விட்டு வெளியேறினார்.  முஜீபுதீனுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் பலரும் மன்றத்தை விட்டு வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.  இதைத் தொடர்ந்து தலைவர் வேலுமணி சமாதானம் செய்தபின் வெளியே வந்தனர்.  இதுகுறித்து திமுகவை சேர்ந்த தலைவர் வேலுமணி கூறுகையில், இன்று நகரின் முக்கிய பிரச்னைக்கான பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பலகோடி மதிப்பிலான திட்டங்கள் விவாதிக்கப்பட இருந்தது. 

ஆனால் அதிமுகவினர் வேண்டுமென்றே திட்டம் தீட்டி கூட்டத்தை நடக்கவிடாமல் செய்துவிட்டனர்.  ஆனால் மற்ற கட்சி கவுன்சிலர்கள் ஆதரவோடு விரைவில் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.