சிதம்பரம் திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தில் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளங்களில் ஒன்றான வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்த குளத்தில் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்தகுளங்களில் ஒன்றான வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்த குளத்தில் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை போராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்கள் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி, இ.மணமாறன் ஆகியோர் திராவிட வரலாற்று ஆய்வுக்கழகம் என்ற அமைப்பை நிறுவி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு தூர்வாரப்பட்ட நடராஜர் தீர்த்தகுளமான திருப்பாற்கடல் தீர்த்த குளத்தை, ஸ்ரீஆத்மநாதர் கோயில் அறங்காவலர் பசவராஜ் வேண்டுகோளை ஏற்று மேற்கண்ட பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின் போது தீர்த்தகுளத்தின் வடபுற 4-வது படிக்கட்டில் சேர்ந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு ஆண்ட கோப்பெருஞ்சிங்கனின் 3வது ஆட்சியாண்டு கல்வி (கிபி 1246) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீபண்டாரத் திருவாய் முதுகண்ணாக எனத் தொடங்கும் 5 வரி கல்வெட்டாக இது உள்ளது. இக்கல்வெட்டானது சிதம்பரம் தில்லைக் காளியம்மன் திருக்கோயில் பின்புற தேவக்கோட்டத்தில் காணப்படும் கோப்பெருஞ்சிங்கன் பொறித்த மூன்று கல்வெட்டுகளின் தொடர்ச்சியாகும். பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த அம்பலத்தமுது கொத்தழர் குழலி என்பவர் அளித்த நிலக்கொடையை இக்கல்வெட்டு போற்றுகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் முதுகண்ணாக உடைய என்ற அந்தப்புர பெண்களுக்கு அறிவூட்டும் குருவின் பெயர் தீர்த்தகுள கல்வெட்டிலும் குறிக்கப்படுகின்றது.
மேலும் தீர்த்தகுளத்தை முழுவதையும் ஆராய்ந்த போது பல திருக்கோயில்களின் சிதைந்த கல்வெட்டு துண்டுகள் காணமுடிகிறது. மேலும் இங்கு தீர்த்த குளத்துடன் இணைந்த மண்டபமும், சிறிய ஆலயமும் இருந்த தடயங்களும் கிடைத்துள்ளன. கோயில் உறுப்புகளான யாழிவரிசை, தரங்கபோதிகை, கபோதிக பகுதி, உருளை வடிவிலான அரைத்தூண்கள் போன்றவை இங்கு நடைபெற்ற இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் உழவாரப்பணியில் போது கிடைத்துள்ளன.
இதை தவிர லிங்கத்தை வழிபடும் வில்வீரன் (கண்ணப்ப நாயனார்) போர்ச் சிற்பங்கள் போன்றவை சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் பார்க்கும்போது தீர்த்தக்குள மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பு, பிற்சோழர் கலை பாணியை ஒத்ததாக உள்ளது. மேலும் குளத்தின் அருகாமையில் உள்ள மாணிக்கவாசகர் கோயிலில் உள்ள புதிய கல்வெட்டுகள் குறித்தும் முறையான அறிவியல் தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிவுகள் வெளிவரும் போது மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் குறித்த ஐயங்களுக்கு விடை கிடைக்கும் என்கிறார் வரலாற்று துணைப் பேராசிரியர் இல.கணபதிமுருகன்.