சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 10.10 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் எஸ்.ரத்தினசபாபதி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.
ஜூலை 3-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.4-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.5-ம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர், துணைச் செயலாளர் என்.எஸ்.மணி தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.