முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை பொய்த்ததால் பல ஏக்கர் பரப்பில் துவரைபயிர் சேதம்

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் திண்டுக்கல் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய தாலுகாவான பழனி மற்றும் சுற்றுப்பகுதி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பழனி அருகே மழை பொய்த்ததால் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த துவரை பயிர் நாசமானது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் திண்டுக்கல் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய தாலுகாவான பழனி மற்றும் சுற்றுப்பகுதி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. பழனியை அடுத்த நெய்க்காரபட்டி, அமரபூண்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னரே தென்னை, இலவ மரங்கள் முற்றிலும் காய்ந்து விட்டன.  ஆயக்குடி, கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி, கொய்யா, மா போன்ற மரம், செடிகளும் கருகிவிட்டன. தவிர வையாபுரி கண்மாய், இடும்பன்குளம் உள்ளிட்ட பல குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் பலநூறு ஏக்கர் வயல் பரப்பிலும் நெல், சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படாமல் தரிசாக போடப்பட்டுள்ளது.

பழனி ராமாதநகரில் கணேசன் என்பவர் கடந்த சிலமாதம் முன்பு பருவமழை, கிணற்று நீரை நம்பி சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் சுமார் இரண்டு இலட்சம் செலவு செய்து துவரை சாகுபடி செய்திருந்தார்.  பருவமழை முற்றிலும் பொய்த்த நிலையில் அவரது தோட்டத்து கிணறும் மணல் மேவியதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.  ஐந்து ஏக்கரிலும் பயிர்கள் காய்ந்து விட்ட நிலையில், செடிகள் ஒரு அடிகூட வளராமல் முருகி உள்ளது. 

இதுகுறித்து கணேசன் கூறுகையில், கடந்த இரண்டு வருடமாக மழை இல்லாத நிலையில் கிணற்றை நம்பி விவசாயம் செய்தோம். முன்னரே இடும்பன்குளம் உடைந்து அதில் வந்த தண்ணீர் கிணற்றுசுவரை இடித்து கிணறு மணல் மூடியது.  சிரமப்பட்டு கடன்வாங்கி கிணற்றைைதூர்வாரிய நிலையில் கடந்த சிலமாதம் முன்பு பொதுப்பணித்துறை அணையை திடீரென திறந்துவிட்டபோது கிணற்றின் அருகே உள்ள வாய்க்காலில் அதிக வேகத்தில் வந்த தண்ணீரால் மீண்டும் கிணறு சுவர் இடிந்து கிணறு மணல் மேவிவிட்டது.  இதனால் தண்ணீர் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையீடு செய்தும் இழப்பீடு கிடைக்கவில்லை.  தற்போது துவரை பயிர் செய்து சுமார் இரண்டு இலட்சம் இழப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே, மாவட்ட அரசும், விவசாயத்துறையும் இழப்பீட்டுக்கு வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு வறட்சி நிவாரணம் வழங்கி சுமார் ஓராண்டாகி விட்ட நிலையில் தற்போது தொடர்ந்து மழை இன்றி விவசாயிகளுக்கு விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இது குறித்து வருவாய்துறை மற்றும் வேளாண்துரை கணக்கீடு செய்ய அதிக பாதிப்புக்குள்ளான பழனி பகுதியில் விரைவாக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டியது அவசியமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.