முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த கமலீஸ்வரன் கோயிலில் சோழ மன்னான முதலாம் ராஜராஜ சோழன் காலத்து (கிபி 985-1014) இரு கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த கமலீஸ்வரன் கோயிலில் சோழ மன்னான முதலாம் ராஜராஜ சோழன் காலத்து (கிபி 985-1014) இரு கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டை கண்டறிந்த பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்கள் இல.கணபதி முருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்தது: இக்கல்வெட்டானது கோயில் தென்புற தேவகோட்ட சுவற்றி்ல் உள்ளது. 5 வரி கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ள இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டாகும். ஸ்ரீராஜ தேவர்க்கு யாண்டு என தொடங்கும் கல்வெட்டு, பெரும்பற்றப்புலியூர் மூலபருடையார்க்கு அளிக்கப் பெற்ற அறக்கொடையை குறிக்கிறது. கல்வெட்டில் ராஜராஜ சோழன் உத்தமப்பிரியன் என்று போற்றப்படுகின்றான்.

கூத்தாட்டுக்காணி: ராஜராஜன் தனது சிறிய தந்தையான உத்தமசோழன் பால் கொண்டிருந்த அன்பால் உத்தமபிரியன் என்றும் குறிக்கப்பட்டுள்ளான். இதே புனைப்பெயர் முதலாம் ராஜேந்திரனுக்கும் இருந்ததாக கல்வெட்டுகள் போற்றும். உத்தமசோழன் நிழைவாக ராஜராஜன் உத்தமதானிபுரம் என்ற நகரத்தையும், பழையாறுக்கு அருகில் (கும்பகோணம்) அமைத்திருந்தான். மேலும் ஆடல் வல்லான் ஒருவனுக்கு ராஜராஜன் அளித்த கூத்தாட்டுக்காணி பற்றிய விபரங்களையும் கமலீஸ்வரன் கோயில் கல்வெட்டு தமிழ் வரிவடிவத்தில் தெரிவித்துள்ளது. கூத்தாட்டுக்காணி என்பது கூத்தாடும் கலைஞர்களுக்கு சோழர்கள் வழங்கிய நிலதானமாகும்.

Advertisement

சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்பலியூர் என்ற பெயர் கொண்டது: கல்வெட்டு குறிக்கும் பெரும்பற்றப்புலியூர் சிதம்பரத்தில் பழைய பெயராகும், மூலபருடையார் என்று கல்வெட்டு குறிக்கும் சொல் இறைவன் தில்லை மூலட்டானத்து (ஆதிமூலநாதர்) இறைவனையே குறிக்கிறது. சோழர் காலத்தில் சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்புலியூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதன் வாயிலாக கமலீஸ்வரன் கோயிலின் பழமை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்தது என்பதை அறிய முடிகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments