விருதுநகர் அருகே வெடிவிபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவை, தமிழ் புலிகள் அமைப்பு, புதிய தமிழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சனிக்கிழமை அரசு மருத்துவமனையை முற்றுக்கையிட்டும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ளது ஒண்டிப்புலிநாயக்கனூர் கம்மாபட்டி பகுதியில் கருந்திரி தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதில், அருமைதுரையின் சடலத்தை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதேபோல், சிறுமி காளீஸ்வரி, சிறுவன் காளிராஜ் மற்றும் மூதாட்டி பொன்னம்மாள் ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் இளங்கோ, புதிய தமிழகத்தின் ஒன்றியச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் அரசு மருத்துவமனை முன்பு விருதுநகர்-காரியாபட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த கோட்டாட்சியர் உதயகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைப்புகளின் நிர்வாகிகள் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் தொகையாக ரூ.5 லட்சமும், சேதமடைந்த வீடுகளை சீரமைத்தல், ஒரு வாரத்திற்கு உணவு இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணி உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சடலங்களை வாங்க மாட்டோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் கிராம மக்கள் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தினால் விருதுநகர்-காரியாபட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.