விருதுநகர் மாவட்டத்தில் 22,370 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வில் பங்கேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 22,370 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 22,370 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு இன்று(திங்கள்கிழமை)தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்களில் 67 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. இதில்,அருப்புக்கோட்டை-7,134 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர்-7,186 பேரும் மற்றும் விருதுநகர்-7,800 பேரும் என மொத்தம் 22,120 மாணவ, மாணவிகளும் மற்றும் 250 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
இப்போது இருப்பதை விட பிளஸ்2 தேர்விற்கு 3 மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கான நுழைவுச் சீட்டுக்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் விநோகிக்கப்பட்டும், பள்ளிகளில் இருக்கைகளில் பதிவெண்கள் எழுதப்படும் பணியும் முடிந்துள்ளது.
இம்முறை மாணவ, மாணவிகள் துண்டுச் சீட்டுக்கள் மூலம் பார்த்து எழுவதை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மேற்பார்வையாளர்களின் பார்வைக்கு படும் வகையில் செய்கைகளை அறிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 பேர் வரையில் அனுமதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வினாத்தாள் 3 மையங்களில் இருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு மணிநேரத்திற்குள் சென்று சேரும் வகையில் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக காலையில் குறித்த நேரத்திற்குள் விநோகிக்கப்பட இருக்கிறது.
இதேபோல், தேர்வு முடிந்ததும் வினாத்தாள் கட்டுக்கள் அனைத்தையும் அதே வாகனம் மூலம் சேகரித்து மையங்களுக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து இம்மையங்களில் இருந்து தான் பள்ளி கல்வி துறை உத்தரவின் படி அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இதற்கு முன்பு விடைத்தாள்களை அஞ்சல் மூலம் ரயில்களில் ஏற்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் போது கட்டுக்கள் தவறி விழுந்தது. இதுபோன்ற புகார்களை தடுப்பதற்காக வினாத்தாள்கள் கட்டுக்களை எடுத்துச் செல்வதற்காக புதிய நடைமுறையயை பின்பற்றப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.