சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜர் கோயிலுக்கு முதல்வர் வருவார் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
வருகிற மார்ச் 11-ம் தேதி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து வாக்கு கேட்டு கீழரதவீதியில் பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். சென்னையிலிருந்து அன்றைய தினம் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கி பொதுக்கூட்டம் மேடைக்கும் வருகிறார். கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வளாகத்தில் உள்ள ஹெலிபேடிலிருந்து அண்ணாமலைநகர், ரயில்வே மேம்பாலம், எஸ்.பி.கோயில், வேணுகோபால்பிள்ளைத்தெரு, போல்நாராயணன்தெரு உள்ளிட்ட சாலைகளில் புதிதாக தார்சாலை போடப்பட்டு வருகின்றன. மேலும் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர்களில் வர்ணம் பூசப்பட்டும், மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற இடங்களில் எரியாமல் இருந்த மின்விளக்குகள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோயிலுக்கு வருமாறு தீட்சிதர்கள் அழைப்பு: தமிழகஅரசு ஆட்சேபனை தெரிவிக்காததால், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், மகிழ்ச்சியில் உள்ள பொதுதீட்சிதர்கள் அண்மையில் சென்னை போயஸ் கார்டனுக்கு சென்று, தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் போது நடராஜர் கோயிலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் நடராஜர் கோயிலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.