விருதுநகர் மாவட்டத்தில் பிள்ஸ்2 தேர்வு மையங்களில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இத்தேர்வில் மொத்தம் 22370 மாணவ, மாணவிகளுக்கு 139 பேர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு திங்கள்கிழமை முதல், தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் மாணவ, மாணவிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையங்களில் குவிந்தனர். அதையடுத்து பள்ளி வளாகத்தில் இருந்த பிள்ளையார் கோயிலில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
இம்மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்களில் 67 தேர்வு மையங்களில் இத்தேர்வை 22,120 மாணவ, மாணவிகளும் மற்றும் 250 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத இருந்தனர். இதில், முதல் நாள் தேர்வில் 22231 பேர் பங்கேற்றனர். இம்முறை மாணவ, மாணவிகள் துண்டுச் சீட்டுக்கள் மூலம் பார்த்து எழுவதை தடுப்பதற்காக ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு தேர்வு மையத்திற்குள் வெளி ஆள்கள் நுழைவதை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், 10 வினாத்தாள் மையங்களில் இருந்து, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் வழித்தட அலுவலர்கள் மூலமாக ஒரு மணிநேரத்திற்குள் குறித்த நேரத்திற்குள் விநோகிக்கப்பட்டன. இத்தேர்வுக்கு கட்டுக்காப்பாளர்களாக 20 பேரும், முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 67 பேரும், உதவி கண்காணிப்பாளர்களாக 1200 பேரும், வழித்தட அலுவலர்களாக 15 பேரும், 117 பறக்கும் படை அதிகாரிகளும், அலுவலக பணியாளர்களாக 137 பேரும் என மொத்தம் இத்தேர்வு பணியில் 1621 பேர் வரையில் ஈடுபட்டனர்.
இத்தேர்வு மையங்களில் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்பதை கல்வித் துறை அதிகாரிகளுடன் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் நேரில் சென்று பார்வையி்ட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும் மேற்பார்வையாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது உடன் மாவட்ட முதன்மைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இத்தேர்வு குறித்து சூலக்கரை கேவிஎஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்தில் எழுதிய வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் கூறுகையில், தமிழ் பாடத்தில் பெரும்பாலன கேள்விகள் அனைத்தும் பாட பத்திகளில் குறிப்பிட்ட பதிலை மையமாக வைத்து கடினமாக குறைந்த மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதோடு, ஒவ்வொரு பத்தியிலும் கேள்வி, பதில் மாறி, மாறி படித்திருந்தால் மட்டுமே எளிதாக விடை அளிக்க முடியும். அதேபோல், 4, 8 மதிப்பெண்கள் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.