கேரளத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி, மண்ணெண்னை பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மினி வேனில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,500 லிட்டர் மண்ணெண்னை மற்றும் 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மினி வேனில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,500 லிட்டர் மண்ணெண்னை மற்றும் 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலையில் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் உள்ளிட்டோர் நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட மினி வேனை நிறுத்த சைகை காட்டினர். மினி வேன் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனர். தொடர்ந்து கொல்லங்கோடு சாலையில் சென்ற வாகனத்தை கிராத்தூர் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
தொடர்ந்து வேனை சோதனை செய்தபோது 45 பிளாஸ்டிக் கேன்களில் 1,500 லிட்டர் மண்ணெண்னை பதுக்கி வைத்திருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்னை மீனவர்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்னை என்பதும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்ததும் தெரியவந்தது.
Advertisement
தொடர்ந்து தகவலின் பேரில் குளச்சல் பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சாலையோரம் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்னை ரேஷன் அரிசியை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்றனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.