முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி: மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் வேட்பாளரை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் வேட்பாளரை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்த போது, அக்கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணிபுரிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்திருந்தன. இந்நிலையில் திடீரென கூட்டணியில் இருந்து இரு கட்சிகளும் விலகிய நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்பட்டது.

ஆனால் அக்கட்சி பா.ஜ.கவோடு கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இதனால் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்தன.

மாநிலக் குழுக் கூட்டம்

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வி.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலர் ஆர்.விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் ஆகியோர் அரசியல் சூழல் குறித்து எடுத்துரைத்தனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அ.ராமமூர்த்தி, அமு.சலீம், வி.எஸ்.அபிஷேகம், து.கீதநாதன், கே.முருகன், ஆர்.ஜீவானந்தம், தினேஷ் பொன்னையா, சரளா, மாஹே பொறுப்பாளர் மனோகரன் நம்பியார், ஏனாம் பொறுப்பாளர் ஆனந்த கோதண்டராமன்,

காரைக்கால் பொறுப்பாளர் பி.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சிபிஐ வேட்பாளரை போட்டியிடச் செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சி, போன்றவற்றின் உதவியுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு பின் சிபிஐ வேட்பாளர் நிறுத்தப்படுவதால், அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்.

பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அரசு விடுதி முறைகேடுகளை விசாரணை செய்ய வேண்டும். புதுவை, காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட 3 பகுதிகளிலும் 16 மாணவ, மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன. மேலும் பாகூர், காரைக்காலில் பிற்பட்டோர் விடுதிகள் உள்ளன.

ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் விடுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மனரீதியில் உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும்.

புதுவையில் மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், தேர்தல்நன்னடத்தை விதி அமுலுக்கு வந்த நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றும்முயற்சி கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.