விருதுநகர் அருகே வாகனச் சோதனையின் போது பிடிபட்ட ரூ.5.78 லட்சத்தை பறக்கும் படையின் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்(45), பழனிச்சாமி(35). இவர்கள் இருவரும் விருதுநகர் அருகே உள்ள மேலஆமத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் உதவி காசளர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் சனிக்கிழமை பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்காக சிவகாசி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5.78 லட்சத்தை வாகனத்தின் மூலம் கொண்டு சென்றனர்.அப்போது, மத்தியசேனைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பாதுகாப்பு பறக்கும் படை அலுவலர்கள் வாகனத்தை நிறுத்துமாறு கூறி சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தின் உள்ளே பணப்பையில் குறிப்பிட்ட அளவு பணம் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பட்டாசு ஆலை உதவி காசளர்களிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்கள் காளீஸ்வரி பட்டாசு ஆலையின் சார்பில் செயல்பட்டு வரும் மேலஆமத்தூர் ஆலைக்கு ரூ.3.04 லட்சமும், மத்தியசேனைப் பகுதியில் இயங்கி வரும் ஆலைக்கு ரூ.2.74 லட்சமும் குறிப்பிட்ட வங்கியில் இருந்து எடுத்துச் செல்வதாகவும், அதற்கான ரசீதுகளையும் அலுவலர்கள் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்தனர். மேலும், இந்தப் பணம் ஆலைகளில் பணியாற்றி வருகிற தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்வதாகவும், அதற்கான ஆவணங்களையும் காண்பித்தனர்.
இதில் திருப்தி அடையாத அலுவலர்கள் குறிப்பிட்ட ஆலைகளில் எத்தனை பேர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்கிற விவரமும், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வார கூலி வழங்கப்படுகிறது என்பதற்காக ஆவணங்களை காட்டுமாறு தெரிவித்தனர். இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகளிடம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் பிரச்னையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாத அதிகாரிகள் வாகனத்தில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து விருதுநகர் மாவட்ட கருவூலத்தில் செலுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.