தமிழக ரசிகர்கள் திரைப்படங்களில் நடிப்பவர்களை மிகவும் நேசிக்கின்றனர்: நடிகை லட்சுமிமேனன்
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொறிதல் ரதம், அலங்காரரதம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிறைவு
கேரள மாநிலத்தை விட தமிழ்நாட்டு ரசிகர்கள் திரைப்படங்களில் நடிப்பவர்களை மிகவும் நேசிக்கின்றனர் என திரைப்பட நடிகை லட்சுமிமேனன் தெரிவித்தார்.
பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொறிதல் ரதம், அலங்காரரதம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் திரைப்பட இயக்குனர் கஜேந்திரன், நடிகை லட்சுமிமேன், நடிகர் மூணாறு சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்பதற்காக வந்த நடிகை லட்சுமிமேனன் சனிக்கிழமை இரவு அம்மா உஷா, பாட்டி சித்திரா ஆகியோருடன் பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை இராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்து தங்கத்தேர் புறப்பாடு செய்தார்.
அவர் அளித்த பேட்டியில், மலையாள படத்தில் நடித்தாலும், தற்போது அதிகமாக நடித்து வருவது தமிழ்படங்களில்தான். தற்போது நடிகர்கள் விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன், சித்தார்த்துடன் நடித்த ஜிகர்தண்டா, விமலுடன் நடித்த மஞ்சப்பை, கவுதம் கார்த்தியுடன் நடித்த சிப்பாய் ஆகிய படங்கள் விரைவில் வரவுள்ளது. புதிய படங்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் இரண்டு படங்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ரசிகர்கள் நேரம் கிடைத்தால் படங்களுக்கு செல்வர், ஆனால் தமிழகத்தில் நேரம் ஒதுக்கி ஒருபடத்தை இருமுறை, மூன்றுமுறை பார்க்கின்றனர். திரைப்படங்களில் நடிப்பவர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் நேசிக்கின்றனர். கிராமங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் பாசம், அன்பு அதிகமாக காட்டுகின்றனர். பழனியில் ஒரிருபடங்களில் நடித்த நிலையில் வருத்தமில்லா வாலிபர் சங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன்.
அப்போது பிரமாண்டமான கூட்டம் கூடியிருந்ததை கண்டு பிரமித்தேன். அப்போது மலைக்கு சென்றபோது தங்கத்தேரை இழுக்க நினைத்தேன் முடியவில்லை. ஆனால் மனமுருக சுவாமியை வணங்கினேன். அதன்பின் சுவாமி அருளால் நிறையபடங்களில் நடித்துவிட்டன். ஆகையால் இந்தமுறை வந்து தங்கத்தேரை இழுத்தேன். கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது. முருகர் மிகவும் இஷ்டதெய்வம் என தெரிவித்தார். மேலும், ஹிந்தி படங்களில் இருந்து எந்த வாய்ப்பும் வரவில்லை. நடிப்பு என்பது ரசிகர்களுக்கும், தியேட்டருக்கு வருபவர்களை ரசிக்க வைக்கவுமே. அதைத் தவிர அவார்டு பெறும்படியான படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. தற்போது பனிரெண்டாம் வகுப்பு செல்லவுள்ளேன். பள்ளி நிர்வாகம் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. நடிப்பு நேரம் தவிர மீத நேரத்தில் தோழியர்களுடன் பள்ளிக்கு செல்கிறேன். தேர்தல் பற்றியோ, ஆதரவு பற்றியோ எனக்கு பதில்கூற தெரியவில்லை. அதே போல தமிழ், மலையாளப்படங்களுக்கு இடையேயான வித்தியாசம் பற்றியும் கூறத் தெரியவில்லை என தெரிவித்தார்.