மத்திய அரசு, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ரங்கசாமி பொய்ப்பிரசாரம்: நாராயணசாமி
புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தடையாக உள்ளன என முதல்வர் ரங்கசாமி பொய்ப்பிரசாரம் செய்து வருகிறார் என புதுவை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.
புதுவையின் வளர்ச்சிக்கு மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தடையாக உள்ளன என முதல்வர் ரங்கசாமி பொய்ப்பிரசாரம் செய்து வருகிறார் என புதுவை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டுகளில் மத்திய காங்கிரஸ் அரசு, மத்திய அமைச்சராக தான் இருந்து செய்த சாதனைகளை குறித்த பட்டியலை நாராயணசாமி வெளியிட, எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் பெற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர் ஷாஜஹான், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஏகேடி. ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையின் வளர்ச்சிக்கு நாங்கள் தடையாக உள்ளதாக முதல்வர் ரங்கசாமியும்,என்.ஆர் காங்கிரஸ் கட்சியினரும் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். புதுவை மக்கள் மத்தியில் முதல்வர் ரங்கசாமி தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்.பி நிதி முழுமையாக செலவிடப்பட்டுள்ளது.2 ரயில்கள் மட்டுமே சென்ற புதுவையில் தற்போது 17 ரயில்களை மக்கள் வசதிகளுக்காக விட்டுள்ளோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுற்றுலா, குடிநீர் திட்டம், மேம்பாலங்களுக்கு என ரூ.770 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
உண்மையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மாநில அரசு பல திட்டங்களை முடக்கியுள்ளது. சுற்றுலா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த இலவச லேப்டாப், இலவச மிக்சி, கிரைண்டர்,வாசிங்மெசின் ஆகிய திட்டங்களை ரங்கசாமி நிறைவேற்றவில்லை..
மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறேன். எங்களுடன் புதிய நீதிக்கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி கூட்டணியில் உள்ளன.
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுல் வருவதாக தெரிவித்துள்ளனர். விரைவில் புதுச்சேரி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.