சிதம்பரம் அருகே மணிலா சாகுபடியில் நஷ்டம்: விவசாயி தற்கொலை முயற்சி, கவலைக்கிடம்
சிதம்பரம் அருகே மணிலா சாகுடிபடியில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் பயிரிட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து,மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று
சிதம்பரம் அருகே மணிலா சாகுடிபடியில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் பயிரிட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து,மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரத்தை சேர்ந்த நாகராஜ்(48).விவசாயி. இவர் கடந்த கார்த்திகை மாதம் 4 ஏக்கர் நிலத்தை(மானாவரி நிலம்) ரூ.20 ஆயிரத்திற்க்கு குத்தகைக்கு வாங்கி, அதில் மணிலா பயிரிட்டார். அப்போது முளைப்பு வரும் நேரத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்தது. மழை நீர் விரைவில் வடிய போதிய வழியில்லாததால் மணிலா பயிர் முழுவதும் அழுகி வீணாகி விட்டது,
பின்னர் வீணான பயிரை சரிகட்ட 10 நாட்கள் கழித்து நிலத்தை உழுது மறுபடியும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். தொடர்ந்து வெயில் கடுமையாக இருந்ததால் பாதிக்கும் மேற்பட்ட பயிர்கள் வறட்சியின் காரணமாக காய்ந்து விட்டன. சாகுபடியின் போது நான்கு ஏக்கரில் மொத்தம் 23 மூட்டைகள் மணிலா கிடைத்துள்ளது. ரூ.1.50 லட்சம் செலவு செய்து இரு முறையும் பயிர் செய்ததில், சாகுபடியில் கிடைத்த மணிலாவின் மதிப்பு ரூ.30 ஆயிரம் மட்டுமே.
பயிரிடுவதற்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த சில நாட்களாக அவரது மனைவியிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே.7 ந்தேதி புதன்கிழமை மனவேதனையில் இருந்த நாகராஜ் விஷ்ம் குடித்துள்ளார். இதயறிந்த அருகாமையில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் விவசாயி நாகராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பரங்கிபேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு, விவசாயி மனைவி ராசாத்தி, மகன் ரமேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.