கரூரில் கள்ளத்தொடர்பால் காதலியுடன் தீக்குளித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரூர் பசுபதிபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி சந்திரா(42) மற்றும் மகள், மகன் ஆகியோர் உள்ளனர். இவர்களது பக்கத்து தெருவில் சந்திராவின் அக்கா தாமரை செல்வி(49) வசித்து வந்தார். இவரது கணவர் ஆண்டியப்பன். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முனியப்பன் கடந்த நான்கு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டதால் செந்தில்குமார், தாமரைசெல்வியின் வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது செந்தில்குமாருக்கும், தாமரைசெல்விக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தில்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தாமரைச் செல்வி சந்தேகித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் மண்ணெண்ணையை தாமரைசெல்வி மீது ஊற்றிவிட்டு தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் இருவரையும் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் திங்கள்கிழமை இரவு பரிதாபமாக இறந்தார். தாமரைசெல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக கரூர் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.