வடக்குமாங்குடி கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் நிதிஉதவி!
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் கலவரத்தில் காயமுற்ற இறந்தவர்கள் 2 பேர் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை அப்பகுதிக்கு
சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் கலவரத்தில் காயமுற்ற இறந்தவர்கள் 2 பேர் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று தலா ரூ.25 ஆயிரகம் நிதிஉதவியை வழங்கினார்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனையடுத்து ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு 7 மணிக்கு மேல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் வடக்குமாங்குடி காலனியைச் சேர்ந்த ராணி (45), பெத்தான் (70), நாகூரான் (60), குருநாதன்(56), பழனி (80), பாப்பா (65) ஆகிய 6 பேர் காயமுற்றனர். இதில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த பழனி, பாப்பா ஆகிய இருவர் இறந்தனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்திற்கு சென்று கலவரத்தில் இறந்த பாப்பாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறந்தவர்கள் இருவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார். அவருடன் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், நிர்வாகிகள், ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, குமராட்சி ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திருமாவளவன் பேசியது: நாம், நமது கட்சிக்கு வாக்கு சேர்த்தோம். அவர்கள் அவரது கட்சிக்கு வாக்கு சேகரித்தார்கள். அப்படி இருக்கும் போது ஏன் தாக்குகிறார்கள். தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்ததற்காக தாக்குகின்றனர். வடக்குமாங்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் குறிப்பாக ஒரு கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் என திருமாவளவன் தெரிவித்தார்.