மோடி பிரதமராக பதவி ஏற்பு: இனிப்பு வழங்கிய பாஜகவினர், பெற மறுத்த மேயர்
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவி ஏற்றதற்கு, சேலம் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினர். ஆனால் அதை அதிமுக மேயர் எஸ்.சௌண்டப்பன் பெற மறுத்துவிட்டார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவி ஏற்றதற்கு, சேலம் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினர். ஆனால் அதை அதிமுக மேயர் எஸ்.சௌண்டப்பன் பெற மறுத்துவிட்டார்.
பாஜக மாநிலச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் நினைவாக மரவனேரி பிரதான சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று சேலம் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் கையெழுத்து பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கையெழுத்து பெற்ற மனுவை மேயரிடம் வழங்கவும், கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கவுக ம் பாஜக மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.பி.கோபிநாத் தலைமையில், துணைத் தலைவர் குப்புசாமி, மண்டலத் தலைவர்கள் சின்னதுரை, வெங்கடேஷ் உள்ளிட்டோர், மேயரின் குறை கேட்பு கூட்டம் நடைபெற்ற மைய அலுவலக அரங்கிற்கு சென்றனர்.
Advertisement
மனுவுடன், நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடும் விதமாக பாஜகவினர் இனிப்புகளையும் எடுத்துச் சென்றிருந்தனர். மனுவை மேயர் எஸ்.சௌண்டப்பனிடம் வழங்கிவிட்டு அவருக்கு இனிப்பு வழங்கினர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாஜகவினர் திடீரென இனிப்பு வழங்கியதால் அதிர்ச்சி அடைந்த மேயர், சிரித்துக் கொண்டே இனிப்பைப் பெற மறுத்தார்.
இருப்பினும் பாஜகவினர் விடாப்பிடியாக இனிப்பை மீண்டும் வழங்கினர். அருகில் இருந்து இதைக் கண்ட துணை மேயர் எம்.நடேசன் ஒரு இனிப்பை எடுத்துக் கொண்டார்.
இருப்பினும் மேயர் விடாப்பிடியாக இனிப்பைப் பெற மறுத்ததுடன், இனிப்பைக் கொடுத்து எனது பதவிக்கு வேட்டு வைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனால் பயந்துபோன துணை மேயரும் தான் எடுத்த இனிப்பை சாப்பிடாமல் அருகில் இருந்தவருக்குக் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து பாஜக நிர்வாகிகள் இனிப்பை அங்கிருந்த அதிகாரிகளுக்கு கொடுத்துவிட்டுச் சென்றனர்.