நாகையில் 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம்: நவ. 2-ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவ. 2-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென நாகையில் நடைபெற்ற 5 மாவட்ட மீனவப்
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நவ. 2-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென நாகையில் நடைபெற்ற 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை, அக்கரைப்பேட்டை, டாடா நகர் சமுதாயக் கூடத்தில் 5 மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களின் மீனவப் பஞ்சாயத்தார்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, தூக்குத் தண்டனை வழங்கிய இலங்கை அரசுக்கும், இலங்கை அதிபர் ராஜபக் ஷவுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பது. தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பிரச்னையில் கண்டும், காணாத போக்கைக் கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டிப்பது. இது குறித்து இலங்கை தூதரை அழைத்து, இந்தியாவின் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவது.
இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி நவ.2-ம் தேதி முதல் 5 மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது. இக்கோரிக்கைக்கு விரைவான தீர்வு கிடைக்காவிட்டால், நவ. 6-ம் தேதி முதல் 5 மாவட்ட மீனவர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.