விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமில் 52642 மனுக்கள்
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடந்த சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் தொகுதிக்குள் மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடந்த சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் தொகுதிக்குள் மாற்றம் என மொத்தம் 52642 பேர் வரையில் மனுக்கள் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.15ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1.1.2015-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்த முகாம் கடந்த அக்.15, நவ.10ம் தேதி வரையில் நடைபெற்றது.
இம்முகாமில் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் மாற்றம் உள்ளிட்டவைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் அளித்தனர். அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 891 வாக்குச்சாவடி மைய அலுவலகங்களில் 2 நாள்கள் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது.
Advertisement
இதில், சட்டப்பேரவை தொகுதி வாரியாக மனுக்கள் பெறப்பட்ட விவரம், விருதுநகர்-8329, அருப்புக்கோட்டை-7687, திருச்சுழி-5400, சிவகாசி-8334, சாத்தூர்- 8239, ஸ்ரீவில்லிபுத்தூர்-7221, ராஜபாளையம்-7432 என மொத்தம் 52642 பேர் வரையில் படிவங்களை அளித்துள்ளனர். இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-41785, பெயர் நீக்கம்-674, திருத்த படிவம்-7654, ஒரு சட்டப்பேரவை தொகுதிக்குள் பாகம் மாற்று படிவம்-2529 என மனுக்கள் அளித்துள்ளதாக தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஸ்ரீதர் தெரிவி்த்தார்.