மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
சிதம்பரத்தில் மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரத்தில் மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் மீனாதேவிக்கும், நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அளக்குடி கிராமத்தைச் சேர்ந்த காவலர் ராஜிவ்காந்தி (29) என்பவருக்கும் கடந்த 23-1-2013ல் திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் ராஜீவ்காந்தி, மனைவி மீனாதேவியுடன் சிதம்பரம் விபிஷணபுரம் சாவித்திரி அம்மாள் நகரில் உள்ள மாமனார் மாரியப்பனுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாமனார் மாரியப்பன் கூலிப்படை மூலம், தனது மருமகனான ராஜீவ்காந்தியை கொலை செய்ய முயற்சிப்பது தெரியவந்தது.
ராஜீவ்காந்தி தலைமறைவாக இருந்து, கூலிப்படையினர் யார் என என்பதை கண்டுபிடித்துள்ளார். தற்போது இதுகுறித்து காவலர் ராஜீவ்காந்தி, தன்னை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள மாமனார் மாரியப்பன் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயற்சிப்பாக சிடி மற்றும் தொலைபேசி உரையாடல் ஆதாரங்கள், கூலிப்படையினர் குறித்த விபரங்களுடன் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி முருகன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா ஆகியோர் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.