137 அடியை எட்டியது பாபநாசம் அணை!
வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநத
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை மாலை 137 அடியை எட்டியது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 149 அடியை தாண்டியது.
வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறைந்த கொள்ளளவை கொண்ட கடனாநதி, ராமநதி அணைகள் 2 முறை நிரம்பியது. கருப்பாநதி, அடவிநயினார் மற்றும் நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குண்டாறு அணை நிரம்பிய நிலையில் ஒரு மாதமாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1250 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 600 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் பிற்பகலில் 137.00 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 97.80 அடியாகவும் இருந்தது.
சேர்வலாறு நிரம்பியது: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 149.08 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 500 முதல் 700 கனஅடி வரை நீர்வரத்து இருந்தது. அணையின் கொள்ளளவு 156 அடியாக இருந்த போதிலும் அணையின் பாதுகாப்பை கருத்தில் 149 அடிக்கு அதிகமாக நீரை சேமித்து வைக்க முடியாத நிலையில் அணையில் இருந்து 500 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.
அணையின் நீர்வரத்தை பொறுத்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அணையில் இருந்து உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்படுவதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்ததால் அணைகள் மூடப்பட்டுள்ளன.கடந்த 2 தினங்களாக நீ்ர் பிடிப்பு பகுதியில் மழை இல்லை. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதையடுத்து மணிமுத்தாறு அணையில் இருந்துபுதன்கிழமை பெருங்கால் பாசனத்திற்காக 20 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 82.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 72 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 110 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 82.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 65.95 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 97.75 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 36.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது.