சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல்கள் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது! அக்.7-ல் தீட்சிதர்களிம் ஒப்படைப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், புதன்கிழமை இந்து அறநிலையத்துறையினரால் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது. வருகிற அக்.7-ம் தேதி செவ்வாய்க்கிழமை
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், புதன்கிழமை இந்து அறநிலையத்துறையினரால் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது. வருகிற அக்.7-ம் தேதி செவ்வாய்க்கிழமை உண்டியல் தொகை, பிரசாதக்கடை ஏலத்தொகை உள்ளிட்ட அனைத்தைு தொகைகள் மற்றும் பொருள்கள் கோயில் பொதுதீட்சிதர்களிடம் இந்து அறநிலையத்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.
ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டது. இதுவரை 23 முறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் 1 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 99 ரூபாய் உண்டியல் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொதுதீட்சிதர்கள் தொடுத்த வழக்கில் கடந்த ஜனவரி 6-ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து கோயில் முழு நிர்வாகத்தையும் பொதுதீட்சிதர்கள் ஏற்றனர். இதனையடுத்து கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த இந்து அறநிலையத்துறையினரால் 9 உண்டியல்கள் மற்றும் பிரசாதக் கடைகளை அகற்றி, அத்தொகையினை பொதுதீட்சிதர்களிடம் வழங்குவது செப்.19-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து (அக்.1) புதன்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.முருகன் மற்றும் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர் ஆகியோர் முன்னிலையில் 6 உண்டியல்கள் அகற்றப்பட்டு, அதனை திறந்து எண்ணப்பட்டது. அதில் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து, 188 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. மேலும் உண்டியலில் 32 கிராம் தங்கமும், 52 கிராம் வெள்ளியும் இருந்தது.
மேலும் திறக்கப்படாமல் உள்ள 3 உண்டியல்கள் வருகிற அக்.7-ம் தேதி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டு எண்ணப்படவுள்ளது. அன்றைய தினம் இதுவரை உண்டியல்கள் மூலம் கிடைத்த தொகை, பிரசாதக்கடை மூலம் கிடைத்த தொகை, வங்கிகள் மூலம் வந்த நன்கொடைகள் மற்றும் கோயில் உள்ள அலுவலகம் மற்றும் பொருள்கள் அனைத்தும் நீதிமன்ற ஆணைப்படி பொதுதீட்சிதர்கள் வசம் இந்து அறநிலையத்துறையினரால் ஒப்படைக்கப்படவுள்ளது.