முகப்பு
தற்போதைய செய்திகள்

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆதரவு

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும், தொழிற்சங்கத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற மையக் கோரிக்கையை முன் வைத்து வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

 கடந்த இரு ஆண்டுகளில் நெய்வேலி நிறுவனத்தில் பணி ஓய்வு காரணமாகவும் வேலையிலிருந்து நீங்கியதன் காரணமாகவும் ஏற்பட்டுள்ள நிரந்தரப் பணிகாலியிடங்கள் ஏறத்தாழ 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தக் காலி இடங்களில் உள்ளவர்களின் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களை அந்தந்தப் பணியிடங்களில் நியமனம் செய்தாலோ போதும். இச்சிக்கல் தீர்ந்துவிடும். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஓர் பொதுத்துறை நிறுவனம் நடந்துக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisement

இதனை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை நிறுத்தம், மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவேதும் எட்டப்படவில்லை. மொத்தமுள்ள 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களில் நிரந்தரப்படுத்தப் படுபவர்கள் போக மீதமுள்ள தொழிலாளர்களை அடுத்தடுத்து உருவாகும் காலியிடங்களில், நிரந்தரப் பணியாளர்களாக நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு இடைபட்ட காலத்தில் இத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. இதனையும் என்.எல்.சி. நிர்வாகம் ஏற்க மறுக்கிறது.

மாறாக சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வேலையில்லாத இளைஞர்களை தற்காலிக தொழிலாளர்களாக நியமித்து போராட்டத்தை முறியடிக்க முயல்கிறது. என்.எல்.சி நிர்வாகத்தின் இப்போக்கு அப்பட்டமான நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கை  ஆகும். இயற்கை நீதிக்கு முரணானதாகும். இதனை நெய்வேலி நிர்வாகம் கைவிடவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தி வரும் நீதிக்கான இப்போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முழுமையாக ஆதரிக்கிறது என கி.வெங்கட்ராமன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments