நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை திருநெல்வேலி
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருகிறது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஆலங்குளத்தில் அதிகபட்சம் 93.4 மி.மீ மழையும், நான்குனேரியில் 79.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
ஆய்க்குடியில் 30.2 மி.மீ மழையும், தென்காசி 26 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 16 மி.மீ மழையும், செங்கோட்டையில் 12.2 மி.மீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 4 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 4 மி.மீ மழையும், களக்காட்டில் 3.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.இதேபோல் பாபநாசம் அணையில் 5 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 9 மி.மீ மழையும், கடனாநதி அணை, கருப்பாநதி அணைகளில் தலா 4 மி.மீ மழையும்,
ராமநதி அணையில் 40 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 14 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 9 மி.மீ மழையும் வடக்குபச்சையாறு அணையில் 3.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்மட்டம் 2 அடி உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 63.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 75.59 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 54.57 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 46.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 38.66 அடியாகவும்,
குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 108.75 அடியாகவும் இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 304.75 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
விவசாயிகள் கவலை:
கார் பருவ சாகுபடிக்கு தாமதமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமதமாக நடவு செய்யப்பட்டது. இதனால் அறுவடையும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் பாசனத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே அறுவடை முடிவடைந்துள்ளது.ஒரு சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் மழை பெய்து வருவதால் நெற்பயிர் சாய்ந்து சேதமடையும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மிதமான மழை: வியாழக்கிழமை திருநெல்வேலி நகரம், பேட்டை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் உள்பட இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.