முகப்பு
தற்போதைய செய்திகள்

தேவாரம் ஓடைகளில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

தேவாரம் ஓடைகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரிக்க வேண்டும் என தேவாரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

தேவாரம் ஓடைகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரிக்க வேண்டும் என தேவாரம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.  

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள தேவாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை, கரும்பு, கப்பை கிழங்கு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.     தேவாரம் முதல் கோம்பை வரை உள்ள பகுதி மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வரும் பகுதி. வறட்சியான பகுதியும் ஆகும்.

இப்பகுதியில் நிலவும் வறட்சியை போக்கவே 18-ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. 18-ம் கால்வாயில் திறக்கும் தண்ணீரை கொண்டு கண்மாய்களை நிரப்பி அதன் மூலம் விவசாயம் செய்வது வழக்கம்.     அதேபோல் தேவாரம் முதல் கோம்பை வரை உள்ள மலைப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீரும் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.    

இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது பல ஊர்களில் பெய்து வரும் மழை தேவாரம் பகுதியில் இல்லாததாலும், 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்காததாலும் தேவாரம் பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.     எனவே இப்பகுதி வறட்சியை போக்க 18-ம் கால்வாயில் வழக்கமாக  திறக்கும் தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல் மலைப் பகுதியில் மழைக்காலங்களில் ஓடைகளில் வரும் தண்ணீரை தேக்க ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டினால் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.     விவசாயத்துறை, விவசாய பொறியியல் துறை, பொதுப்பணித்துறை ஆகியவை உரிய நடவடிக்கை எடுத்து ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.  

இதுகுறித்து 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க செயலர் திருப்பதிவாசகன் கூறுகையில், இந்த ஆண்டு 18-ம் கால்வாயிலும் தண்ணீர் திறக்கவில்லை, மழையும் இல்லை இதனால் விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கினால் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்துக்கொள்வோம்.

அதற்காக 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதோடு, மலை பகுதி ஓடைகளில் தடுப்பணை கட்ட வேண்டும், இதுகுறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.