நெல்லை மாவட்டத்தில் மழைக்கு 15,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள 15,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை நீடித்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கரை சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள 15,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை நீடித்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கரை சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இது தவிர மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், ஆலங்குளம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், பேட்டை பகுதியில் அடை மழை பெய்து வருகிறது.
விவசாயிகளுக்கு இழப்பு: தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு அம்பாசமுத்திரம் வட்டத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, கடையம், தருவை, பேட்டை உள்ளிட்ட பகுதியில் சில தினங்களில் அறுடை செய்யும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் ஆய்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கு நீரில் சேதமடைந்த நெற்பயிர்களை செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி கோட்டாட்சியர் ஹெர்மிசத்யா தருவை பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிரை பார்வையிட்டார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ராஜன்ரவிச்சந்திரன், பேட்டை, நரசிங்கநல்லூர், கருங்காடு பகுதியில் மழைக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிரை பார்வையிட்டார். திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன், அம்பாசமுத்திரம், கடையம் பகுதியில் மழைக்கு நீரில் மூழ்கியிருக்கும் நெற்பயிரை பார்வையிட்டார்.
15,000 ஏக்கரில் பாதிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடியில் 15,000 ஏக்கரில் நெற்பயிர் அறுவடை செய்ய வேண்டியது உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீடித்தால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.