நெல்லை: முருகன் கோவில்களில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடக்கம்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்க்கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை கந்தசஷ்டி விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள். சஷ்டிகாலத்தில் விரதம் இருந்து, முருகப்பெருமானுக்கு போற்றி மாலைகள் சூடி வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைப்பதோடு, நோய்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குறுக்குத்துறை முருகன்: திருநெல்வேலியில் தாமிரவருணியின் கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இம்மாதம் 29 ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற உள்ளது. அன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இம் மாதம் 30 ஆம் தேதி காலை 8 மணிக்கு சி.என்.கிராமத்தில் வைத்து தபசுக்காட்சி நடைபெற உள்ளது. அன்று மாலை 7.30 மணிக்கு குறுக்குத்துறை முருகன்கோயில் வளாகத்தில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
யாகசாலை பூஜையில் கோயில் கண்காணிப்பாளர் ஆ.சங்கரநாராயணன், திருவாவடுதுறை ஆதீனத்தின் தென்மண்டல மேலாளர் கோ.ராமச்சந்திரன், நாராயணன், கோமதிநாயகம், அர்ச்சகர்கள் கணேசன், சுந்தரம், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாளையஞ்சாலைகுமாரசுவாமி கோயில்: திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைமை வாய்ந்த பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்பின்பு மூலவருக்கு அபிஷேகம், சிறப்புஅலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 3 ஆம் தேதி வரை 11 நாள்கள் விழா நடைபெறுகிறது. இரவு உள்சுற்று வீதிவலம் நடைபெறுகிறது.
தொடர்ந்து திருவிழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெறுகின்றன. 29 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருநெல்வேலி ரயில் நிலையம்,சிந்துபூந்துறை சிவன்கோயில் பகுதி, செல்வி அம்மன் கோயில் பகுதி, மேகலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த இடங்களில் முறையே தாரகன், சிங்கமுகன், சூரபதுமன், சேவல் ஆகியோரின் அகங்காரத்தை முருகப்பெருமாள் நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சூரசம்ஹாரமும், அதைத்தொடர்ந்து 3 நாள்களுக்கு (அக்.31, நவ.1, 2) ஊஞ்சல் திருவிழாவும் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பக்திச் சொற்பொழிவு, நகைச்சுவை பட்டிமன்றம், கந்தபுராண தொடர் சொற்பொழிவு, பரதநாட்டியம், பல்சுவை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் (பொ) ஏ.தங்கபாண்டியன், தக்கார் கோ.முரளிதரன் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.
இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், நெல்லையப்பர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் கந்தசஷ்டி தொடக்கத்தையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புதுமணத் தம்பதிகள் பலரும் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர்.