முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விசர்ஜனம் ரத்து: இந்து முன்னணி அறிவிப்பு

திருநெல்வேலியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் விசர்ஜன

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:39 AM
பகிர்:

திருநெல்வேலியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் விசர்ஜன ஊர்வலம் ரத்து செய்யப்படும் என இந்து முன்னணி அறிவித்துளது.

போலீஸார் தடியடியில் காயமடைந்த இந்து முன்னணியினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் அரசு. ராஜா, துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை வந்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பார்வையிட அனுமதியளிக்க முடியாது என காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய அரசு. ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதர மதத்தினரது ஊர்வலத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் போலீஸார், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மட்டும் ஆண்டுதோறும் இடையூறுகளை ஏற்படுத்தி நெருக்கடி அளித்து வருகின்றனர். திருநெல்வேலியில் அமைதியாக வழக்கமாக செல்லும் வழியில் ஊர்வலத்துக்கு முயன்றவர்கள் மீது போலீஸார் கண்மூடித் தனமாக தாக்குல் நடத்தியுள்ளனர். இந்த தடியடி சம்பவத்துக்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக் கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி நகரில் வரும் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன்பிறகும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் வரும் 7ஆம் தேதி விசர்ஜனம் செய்யப்படும் 2 ஆயிரம் சிலைகளும், கன்னியாகுமரியில் 7ஆம் தேதி விசர்ஜனம் செய்யப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளும் விசர்ஜனம் செய்யாமல் அப்படியே வைத்திருப்போம். மாநிலம் தழுவிய தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார் அவர்.

மாநில நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி கிருஷ்ணசாமி, குற்றாலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.