தற்போதைய செய்திகள்

2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் : ஈவிகேஎஸ். இளங்கோவன்

மோடி மீது பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் மத்தியில் மறு தேர்தல் நடக்கும். 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமென முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன்

எம். அருண்குமார்

மோடி மீது பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் மத்தியில் மறு தேர்தல் நடக்கும். 2 ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமென முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

பாஜகவில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வரப்படுகின்றனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட தன்னுடைய ஆதரவாளரை மோடி பாஜக தலைவராக்கியுள்ளார்.  மோடி தன்னுடைய தனிப்பட்ட ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.  அதனால் மூத்த தலைவர்களிடையே அவர் மீது அதிருப்தி நிலவுகிறது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளும், கொண்டு வரப்படும் சட்டங்களையும் பார்த்தால் விரைவில் மறு தேர்தல் வரும்.  அப்பொழுது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்.  மோடி இந்துத்துவ கொள்கைகளை முழுமையாக திணிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார். 

மத்திய அரசு அதிகாரிகளும், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதும் கடிதங்களும் இந்தியில் எழுதப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.  தற்போது ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று அழைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.  வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை அம்மா, அப்பா என்று கூறாமல் மாதாஜி, பிதாஜி என்று கூறும் நிலை உருவாகலாம்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று தேர்தலுக்கு முன்பே தற்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறி வந்தார்.  ஆனால் தமிழக மீனவர் பிரச்சனையில் அதே நிலை தான் நீடிக்கின்றது.  இலங்கை வசமுள்ள மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கூடாது என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.  அதனை மோடியோ, தமிழக பாஜக தலைவர்களோ கண்டிக்கவில்லை.  சுதந்திர தினத்தன்று பேசிய மோடியின் பேச்சு அபத்தமாக உள்ளது.  170 நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் பங்கேற்ற விழாவில் இந்தியாவில் கழிப்பிடங்கள் இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,  அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லையென அவர் பேசியது தவறானது.  அதனால் வெளிநாட்டு தொழிலதிபர்கள் எவ்வாறு இந்தியாவில் முதலீடு செய்வார்கள்.  இந்திய பொருளாதாரம் எப்படி வளர்ச்சியடையுமென தெரியவில்லை.

இந்தியா மதசார்பற்ற நாடு என்ற நிலையில் நேபாள நாட்டிற்கு மோடி சென்றபோது பத்திரிக்கை நிருபர்களையும், தொழிலதிபர்களையும் அழைத்து செல்வதற்கு பதிலாக 50 பூஜாரிகளை அழைத்து சென்றதும், இரண்டரை டன் சந்தன கட்டைகளையும் கொண்டு சென்றது மிகவும் தவறு. குற்றப்பின்னனி உள்ள அமைச்சர்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.   தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கர்நாடகத்தில் வழக்கு நடந்து தற்போது இந்த மாதம் தீர்ப்பு வெளிவரக்கூடிய நிலை உள்ளது.  அவ்வாறான நிலையில் குற்ற பின்னனி உடைய ஜெயலலிதாவை மத்திய சட்ட அமைச்சர் தனியாக சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசியது நியாயமானதாக தெரியவில்லை. அதனால் தீர்ப்பு ஒருதலைபட்சமாக வர வாய்ப்பு உள்ளதே. 

அதிமுக அமைச்சர் ஒருவர் கவிதை பாடுகிறேன் என்று கூறிக் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் இழிவுபடுத்தி வருகிறார்.   தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி பேசினால் நாங்களும் தமிழக முதல்வரை தனிப்பட்ட முறையில்  இழிவாக பேச வேண்டிய நிலை ஏற்படும்.  கேரளாவின் ஆளுநராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிக்கின்றது.  உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் அறிவிப்பார்.பாலாறு மற்றும் முக்கிய நதிகளில் மணல் கொள்ளை அளவுக்கு அதிகமாக நடக்கின்றது.  ஆனால் தமிழக முதல்வர் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை. 

தமிழகத்தில் ஏற்கனவே நடந்த, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை என்பது உண்மை.   அதனால் தான் உள்ளாட்சி தேர்தலில் சில கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக தெரிகிறது என்று அவர் கூறினார்.

வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பாலூர் சம்பத்,  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன், தொழிலதிபர் கே. வெங்கடேசன், இளைஞர் காங்கிரஸ் வேலூர் மாவட்ட முன்னாள் தலைவர் பிரபு, இளைஞர் காங்கிரஸ் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் தலைவர் சி.கே. பிரபு, ஆம்பூர் நகரமன்ற உறுப்பினர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT