அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தல் அறிவிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் அளிக்காமல், அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை
தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் அளிக்காமல், அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் செப்.18-ம் தேதி உள்ளாட்சி இடைதேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவிப்பு வெளியிட்ட ஆக.28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும், செப்.4 மனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்றும், செப்.8-ம் தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பினால் சிதம்பரம் நகராட்சியில் வார்டு-17, வார்டு 20 உறுப்பினர்கள் மற்றும் அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு -3 உறுப்பினர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சார்பில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரம் நகராட்சியில் வார்டு 17-ல் போட்டியிட முன்னாள் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியநாரயணன், வார்டு- 20ல் போட்டியிட முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு-3ல் போட்டியிட பி.சதிஷ் ஆகியோர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக சென்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர்களுடன் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்,மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வெங்கடேசன்,அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, முன்னாள் நகரமன்றத் தலைவர் ஹெச்.பெளஜியாபேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ்ட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பின்னர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடையே தெரிவித்தது: ஆளும் கட்சியினர் வெற்றி பெறும் வகையில் தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அவசர கோலத்தில் உள்ளாட்சி இடைதேர்தலை அறிவித்துள்ளது. இது ஆளும் கட்சியின் மோசமான நிலையை காட்டுகிறது. சில எதிர் கட்சிகள் தேர்தல் புறக்கணித்துள்ளது என்பது சரியான முடிவு இல்லை. அப்படி இருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தமிழக அளவில் இந்த இடைதேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி பண பலத்தையும், அதிகார பலத்தையும் ஜனநாயக முறையில் வென்று அமோக வெற்றி பெறும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.