முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மதுபானக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி! பணம் இல்லாததால் கடைக்கு தீ வைப்பு

சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மோகன் என்பவரும், விற்பனையாளராக அந்தோணிசாமி என்பவரும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சிதம்பரம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர், அப்போது அங்கு பணம் இல்லாததால், ஆத்திரமடைந்த அக்கும்பல் தீ வைத்துவிட்டு தலைமறைவாயினர். இதில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமுற்றன.

சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மோகன் என்பவரும், விற்பனையாளராக அந்தோணிசாமி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கணக்கை முடித்து விற்பனைத் தொகை 53,690 தொகையை எடுத்துக் கொண்டு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் நள்ளிரவு மர்மகும்பல் ஒன்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பணம் வைக்கப்படும் லாக்கரை உடைத்தனர். அதில் பணம் இல்லாததால், ஆத்திரமடைந்த மர்மகும்பல் தீ வைத்துவிட்டு தலைமறைவானது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, வரவு-செலவு கணக்கு புத்தகம் மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் சேதமுற்றன. தகவல் அறிந்த ஏடிஎஸ்பி வெங்கடாஜலபதி, டாஸ்மாக் வட்ட உதவி மேலாளர் விஜயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து புகாரின் பேரில் மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூரிலிருந்து மோப்ப நாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நபர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.