சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு ஆவணி மாத மகாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜா, சிவ, சிவா என கோஷமிட்டு மகாபிஷேகத்தை கண்டு களித்து தரிசித்தனர்.
ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
ஆவணி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மகாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 8 மணிக்குள் பகல் உச்சிகால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீ நடராஜப்பெருமான் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபை எழுந்தருளினர்.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திசி அன்று (ஆவணி அவிட்டம் பூணூல் அணிந்து கொள்ளும் நாள்) ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு மந்திரம் சொல்லி பூணூல் அணிவித்து வெந்நீரால் மகாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகாபிஷேகத்தை கண்டு களித்து தரிசித்தனர். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் இரவு 11.00 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.